விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு
பாலக்காடு : பாலக்காடு அருகே, ரோட்டில் குறுக்கே பசு மாடு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, ஊராட்சி நிர்வாகம், 9.67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்லேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், 2016ல், பிராயிரி பகுதியில் பைக்கில் சென்ற போது, பசு மாடு ரோட்டின் குறுக்கே குதித்ததில் படுகாயமடைந்தார். திருச்சூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார்.இந்நிலையில், கிருஷ்ணனின் குடும்பத்தினர், மாவட்ட மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயத்தில் (எம்.எ.சி.டி.,) புகார் அளித்தனர்.இதை பரிசீலனை செய்த தீர்ப்பாய நீதிபதி பிரகாசன், தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டியது ஊராட்சியின் பொறுப்பாகும். கடமை தவறிய பிராயிரி ஊராட்சி நிர்வாகம், கிருஷ்ணனின் குடும்பத்துக்கு, 9.67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், 2018ம் ஆண்டு முதல், தற்போது வரை, 8 சதவீதம் வட்டியும் வழங்க உத்தரவிட்டார். கிருஷ்ணனின் குடும்பத்திற்காக வக்கீல் மாதவன்குட்டி ஆஜரானார்.