உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவுக்கு ஆதரவாக பேசிய காங்., உறுப்பினர் சாம் பிட்ரோடா மீது புகார்!: அரசு நிலத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

சீனாவுக்கு ஆதரவாக பேசிய காங்., உறுப்பினர் சாம் பிட்ரோடா மீது புகார்!: அரசு நிலத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

- நமது நிருபர் - காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா, சீனாவுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளார். இவர், பெங்களூரில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியை குத்தகை காலம் முடிந்தும், சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாக பெங்களூரு தெற்கு பா.ஜ., முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான என்.ஆர்.ரமேஷ், லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத் துறையில் புகார் செய்து உள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் சாம் பிட்ரோடா. முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். தற்போது, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுலின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராகவும், அவரின் ஆலோசகராகவும் உள்ளார்.

சீனாவுக்கு வக்காலத்து

இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, பிரச்னைகளில் சிக்குவதையே வழக்கமாக கொண்டவர். கடந்த சில நாட்களுக்கு முன், ஆங்கில செய்தி சேனலில் நேர்காணல் செய்தார். அப்போது, 'சீனாவை எதிரியாக கருதக்கூடாது; அந்நாட்டை மதிக்க வேண்டும்' எனக் கூறி, சர்ச்சையை கிளப்பி இருந்தார்.இவரது கருத்துகளுக்கு, நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் நேற்று, பெங்களூரு தெற்கு பா.ஜ., முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான என்.ஆர்.ரமேஷ் என்பவர், சாம் பிட்ரோடா, அரசு நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக லோக் ஆயுக்தா போலீசார், அமலாக்கத் துறையிடம் ஆவணங்களை வழங்கி புகார் செய்துள்ளார்.

மும்பையில் பதிவு

புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது:கடந்த 1991ல், சாம் பிட்ரோடா எப்.ஆர்.எல்.ஹெச்.டி., எனும் மூலிகை மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு மற்றும் விற்பனை செய்யும் அமைப்பை மும்பையில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் பெங்களூரு, எலஹங்கா பகுதிக்கு அருகில் உள்ள வனப்பாதுகாப்பு பகுதியை குத்தகைக்கு எடுக்க, கர்நாடகா வனத்துறையினரிடம் முட்டி மோதி வந்தார்.மும்பையில் பதிவு செய்த அமைப்பை வைத்துக் கொண்டு, பெங்களூரில் உள்ள வனப்பகுதியை குத்தகைக்கு எடுக்க, தன் கட்சியின் கர்நாடகா முக்கிய தலைவர்கள் உதவியுடன் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியாக, 1996 ம் ஆண்டு, எலஹங்கா பகுதிக்கு அருகில் உள்ள ஜரகபண்டேவில் உள்ள, 12.35 ஏக்கர் வனப்பகுதியை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார். இது, மத்திய அரசின் வன, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இடத்தில், தன் திட்டப்படி மூலிகை தாவரங்களை பயிரிட்டு, ஆயுர்வேத மருந்து தயாரித்து லாபம் ஈட்டி வந்து உள்ளார்.

கிருஷ்ணா ஆட்சி

கர்நாடகாவில் எடுத்த குத்தகை, 2001ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அப்போது, கர்நாடகாவில் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சாம் பிட்ரோடா, அடுத்த 10 ஆண்டுகளுக்கும் குத்தகை எடுத்தார்.இந்நிலையில், மும்பையில் பதிவு செய்த அமைப்பை வைத்து கொண்டு, பெங்களூரில் வனப்பகுதியை குத்தகைக்கு எடுத்து, லாபம் ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியாயின. இதனால், 2008, செப்டம்பர் ஐந்தாம் தேதி பெங்களூரு, பாதராயனபுராவில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் தன் அமைப்பை பதிவு செய்தார். இதன் பின், 2010 ல், மும்பையில் பதிவு செய்திருந்ததை, ரத்து செய்தார்.இறுதியில், கர்நாடகா வனப்பகுதியின் குத்தகை, 2011ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால், சாம் பிட்ரோடா, குத்தகை காலத்தை நீட்டிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக குத்தகை காலம் முடிந்த நிலத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகிறார்.இந்த கால கட்டத்தில், 15 ஆண்டுகளாக கர்நாடகா வனத்துறை, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருந்தது. இதற்கு மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் ஜாவேத் அக்தர், வனத்துறையின் தலைமை பாதுகாவலர் ஆர்.கே.சிங், முதன்மை வன பாதுகாவலர்களான ரவீந்திர குமார், ரவிசங்கர் ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளதால், இந்த புகாரின் தொடர்பாக, சாம் பிட்ரோடா மீது விசாரணை நடத்தப்படுமா என கேள்வி எழுந்து உள்ளது. இவர் பயன்படுத்தி வந்த நிலத்தின் மதிப்பு, 150 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கீழ் உள்ள அமலாக்கத் துறை என்ன செய்யப் போகிறது என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து என்.ஆர்.ரமேஷ் கூறுகையில், ''மூலிகை தாவரங்களின் மூலம் ஒரு ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டியுள்ளார். அடுத்த 15 நாட்களுக்கு பின், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆறு பேர் மீது வழக்கு தொடருவேன்,'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !