உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது!

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது!

-நமது சிறப்பு நிருபர்-பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது. கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் சபைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த கூட்டத் தொடரில் மொத்தமாக 12 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம், 20ம் தேதி தொடங்கி, நேற்று வரை 19 நாள் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரம், அதை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம், அதில் வன்முறை ஏற்பட்டதால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகளில் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் பார்லி.,யின் இரு சபைகளிலும் பூதாகரமாக எதிரொலித்தது. 'குறிப்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், முழு மழைக்கால கூட்டத்தொடரிலும், ஆக்கப்பூர்வமான அலுவல்கள் நடக்காமல் முடங்கின. இந்நிலையில் கடைசி நாளான நேற்று லோக்சபா கூடியதும் தேசிய பாடலான வந்தே மாதரம் முதல் முறையாக பாடப்பட்டது. இதையொட்டி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய பாடலுக்கு மரியாதை செய்தனர். அதன் பின், லோக்சபா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா கூடியபோது, அதன் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தனக்கு எதிராக தீண்டாமை கொடுமை நடந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த 8ம் தேதி உத்தரகண்டின் ஹல்த்வானியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அதற்கு இரண்டு நாட்களுக்கு பின், அந்த இடத்தை துாய்மைப்படுத்த யாகங்கள், பூஜைகளுடன், 'சுத்திகரணம்' செய்யப்பட்டதாகவும் வருத்தத்துடன் கூறினார். இந்த தீண்டாமை கொடுமையை பா.ஜ.,வுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ராம் சேனா அமைப்பினர் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பேசிய கார்கே, ''தீண்டாமை பிரச்னையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. பார்லி.,யில் நீண்ட காலமாக இயங்கி வருகிறேன். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன் என்பதற்காக இதுவரை ஒருமுறை கூட அனுதாபம் தேடிக் கொண்டது இல்லை. எனினும், இந்த தீண்டாமை கொடுமை பற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுவே என் கோரிக்கை,'' என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ''காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; நம் அனைவருக்குமே இது வருத்தமான சம்பவம். எந்த காலத்திலும் பா.ஜ., இத்தகைய கொடுமைகளை ஆதரித்தது கிடையாது. தீண்டாமை கொடுமை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். விரைவில் விசாரணை நடத்தப்படும்,'' என்றார். ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒரு மசோதா மீது மட்டுமே விவாதம் பார்லி.,யில் இதுவரை இல்லாத அளவுக்கு விவாதங்கள் குறைந்துவிட்டன. தொடர் அமளி காரணமாக லோக்சபாவின் செயல்பாடு வெறும் 19 சதவீதமாகவும், ராஜ்யசபாவின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. பார்லி., ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல. இதற்கு காங்கிரஸ் கட்சியே முழு காரணம். மத்திய அரசு சில பிரச்னைகள் குறித்து விவாதிக்க முன்வந்தது. ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு தயாராகாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் இப்படி தெறித்து ஓடியது இதுவே முதல் முறை. கிரண் ரிஜிஜு பார்லி., விவகாரத் துறை அமைச்சர், பா.ஜ., முதல் முறையாக வந்தே மாதரம் பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் மொத்தமாக 19 நாள் நடந்தது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒரு நாள் கூட, கூட்டத் தொடர் அமைதியாக நடக்கவில்லை. ஆனால், கடைசி நாளான நேற்று லோக்சபா கூடியதும் தேசிய பாடல் அந்தஸ்து பெற்ற வந்தே மாதரம் பாடல் முதல் முறையாக முழுதுமாக பாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி, காங்., - எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் என அனைத்து முக்கிய தலைவர்கள், எம்.பி.,க்களுடன் லோக்சபா முழுதாக நிறைந்திருந்தது. பாடல் பாடப்பட்ட 3 நிமிடங்கள் வரை எந்த அமளியும் இல்லாமல் லோக்சபா அமைதியாக காணப்பட்டது. அதன் பின் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. நிறைவேறிய 12 மசோதாக்கள் * வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா - 2026 * சுரங்க மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த மசோதா - 2026 * வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா - 2026 * தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா - 2026 * பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா - 2026 * உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா - 2026 * நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு திருத்த மசோதா - 2026 * வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா - 2026 * வங்கியாளர்கள் கணக்கு புத்தக சான்றுகள் மசோதா - 2026 * தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா - 2026 * கேரளா பெயர் மாற்றம் மசோதா - 2026 * தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக திருத்த மசோதா - 2026 வினாத்தாள் கசிவு மசோதாவைத் தவிர, மற்ற 11 மசோதாக்களும் சராசரியாக 3 நிமிடங்கள் முதல் 14 நிமிடங்களுக்குள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. எதிர்கட்சிகள் சபையின் மையப்பகுதியில் நின்று கோஷமிட்ட நிலையிலேயே, இவற்றுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை