பெங்களூரு: “லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கைப்பற்றினால், சித்தராமையாவே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்,” என, அவரது மகன் எதீந்திரா கூறியது, மாநில அரசியல் வட்டாரத்திலும் கட்சிக்குள்ளும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற, முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் 'டார்கெட்' நிர்ணயித்துள்ளதோ என்ற குழப்பம், கட்சித்தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்களுக்கு, 20 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டுமென, மேலிடம் கட்டளையிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் முதல்வர் சித்தராமையாவுக்கு, அக்னி பரிட்சையாக உள்ளது. ஏனென்றால், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லையென்றால் முதல்வரை மாற்ற வேண்டி வரும் என, மேலிடம் மறைமுகமாக எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.பதவி நெருக்கடியில் சிக்கியுள்ள முதல்வர், தன் பங்கிற்கு அமைச்சர்களுக்கு 'டார்கெட்' நிர்ணயித்துள்ளார். அவரவர் மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் பதவியை இழக்க வேண்டி வருமென, எச்சரித்துள்ளார். இதனால், அமைச்சர்கள் தங்களின் பொறுப்பு மாவட்டங்களில் முகாமிட்டு, லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருன்றனர்.மேற்கண்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தாத நிலையில், முதல்வர் சித்தராமையாவின் மகன் எதீந்திரா, ஹாசனில் நேற்று கூறியதாவது:முதல்வர் சித்தராமையா தலைமையில், லோக்சபா தேர்தல் நடக்கும். இதில் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றால், எந்த இடையுறும் இன்றி, ஆட்சி காலம் முழுதும் அவரே முதல்வராக நீடிப்பார்.சட்டசபை தேர்தலுக்கு முன்பு, அறிவித்திருந்த வாக்குறுதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏழைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்ற, காங்கிரஸ் ஆர்வம் காண்பிக்கிறது. அனைவரும் முதல்வர் சித்தராமையாவை ஆதரிக்க வேண்டும்.லோக்சபா தேர்தலில், அதிகமான தொகுதிகளை கைப்பற்றினால், அவருக்கு மேலும் சக்தி கிடைக்கும். வாக்குறுதி திட்டங்களுக்கு, ஆண்டு தோறும் 56,000 கோடி ரூபாய் செலவாகும். கர்நாடகாவில் எந்த அரசும், இவ்வளவு நிதியை செலவிட்டதில்லை.இவ்வளவு செலவிட்டு திட்டங்களை செயல்படுத்தும் கட்சிக்கு, மக்களின் ஆதரவு வேண்டும். அப்போதுதான் சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருந்து, திட்டங்களை தொடர்வார்.இவ்வாறு அவர் கூறினார்.எதீந்திராவின் இந்த பேச்சு, கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவி குறித்து, யாரும் வாய் திறக்கக் கூடாது என, மேலிடம் எச்சரித்த நிலையில் எதீந்திரா கூறிய கருத்தால் கட்சியில் அதிருப்தி அலை எழுந்துள்ளது.எதீந்திரா பேச்சுக்கு, வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். அவர் உற்சாகமான நபர். வளரும் தலைவர். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம். சித்தராமையா நம் மாநில முதல்வர். நான் கர்நாடக காங்கிரஸ் தலைவர். நாங்கள் இருவரும் சேர்ந்து, தேர்தலை சந்திப்போம். முதல்வர் தலைமையில் தேர்தல் நடக்கும்.-- சிவகுமார்,துணை முதல்வர்எதீந்திராவின் தனிப்பட்ட கருத்து பற்றி நான் பதிலளிக்கமாட்டேன். கட்சி மேலிடம் ஏற்கனவே, தன் முடிவை தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அதன் பின்னரும், சிலர் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். முதல்வர் பதவி குறித்து, என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது, எங்களுக்கு தெரியாது.- சதீஷ் ஜார்கிஹோளி, பொதுப்பணித்துறை அமைச்சர்