உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சி நிர்வாகிகளிடையே மோதல்: தீர்க்க முடியாமல் தவிக்கும் மம்தா

கட்சி நிர்வாகிகளிடையே மோதல்: தீர்க்க முடியாமல் தவிக்கும் மம்தா

இன்னும் ஒன்பது மாதங்களில் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசின் லோக்சபா எம்.பி.,க்களான கல்யாண் பானர்ஜி - மஹுவா மொய்த்ரா இடையே வெடித்துள்ள நேரடி மோதல், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த, 2024 ஏப்ரலில், கல்யாண் பானர்ஜி - மஹுவா மொய்த்ரா இடையே முதன்முதலில் பொது வெளியில் மோதல் வெடித்தது. திரிணமுல் காங்கிரசின் லோக்சபா கொறடாவாக இருந்த கல்யாண் பானர்ஜி, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில், கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்க சென்றார். அதில், கட்சியின் மற்ற எம்.பி.,க்களின் கையொப்பம் இருந்த நிலையில், மஹுவா மொய்த்ராவின் கையொப்பம் விடுபட்டுஇருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த மஹுவா, 'கல்யாண் பானர்ஜி தவறாக நடந்து கொள்கிறார். அவரை கைது செய்ய வேண்டும்' என, பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இச்சம்பவம் கடந்து செல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூனில், கல்யாண் பானர்ஜி - மஹுவா மொய்த்ரா இடையே மீண்டும் வார்த்தை மோதல் வெடித்தது. பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பேட்டி அளித்த கல்யாண் பானர்ஜி, 'பெண் ஒருவரை அவரது நண்பரே பலாத்காரம் செய்தால், பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?' என, கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையானது. திரிணமுல் காங்., மேலிடமே அமைதி காத்த நிலையில், மஹுவா வலியச்சென்று கண்டனம் தெரிவித்தார். இதனால் கடுப்பான கல்யாண் பானர்ஜி, மஹுவா மொய்த்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தார்.

ராஜினாமா

பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த, 65 வயதான முன்னாள் எம்.பி., பினாகி மிஸ்ராவை சமீபத்தில் மஹுவா மொய்த்ரா திருமணம் செய்தார். இதை கல்யாண் பானர்ஜி பொதுவெளியில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையேயான பகை, கடந்த 4ம் தேதி மீண்டும் வெடித்தது. ஆங்கில சேனலுக்கு பேட்டியளித்த மஹுவா மொ ய்த்ராவிடம், கல்யாண் பானர்ஜியின் குற்றச் சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பதிலளித்த அவர், 'பன்றியுடன் சண்டை போட மாட்டீர்கள். ஏனென்றால் அழுக்காகி விடுவீர்கள். ஆனால், பன்றிக்கு சண்டை போட பிடிக்கும். 'நாட்டில் பெண் வெறுப்பு, பாலியல் விரக்தி, ஒழுக்கக்கேடான ஆண்கள் உள்ளனர். பார்லி.,யில் கூட உள்ளனர்' என்றார். கல்யாண் பானர்ஜியை அவர் மறைமுகமாக சாடினார்.இதற்கு பதிலளித்த கல்யாண் பானர்ஜி, ''பெண்ணுக்கு எதிராக இப்படி பேசியிருந்தால், நாடே கொதித்தெழுந்திருக்கும்,'' என்றார். இருவருக்கும் இடையேயான இந்த சண்டை இதோடு நிற்கவில்லை. கட்சி எம்.பி.,க்களிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒருங்கிணைப்பு இல்லாததற்கு சில எம்.பி.,க்களை திட்டிய அவர், சிலர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் கடிந்து கொண்டார். தான் குறிவைக்கப்பட்டதாக உணர்ந்த கல்யாண் பானர்ஜி, லோக்சபா கொறடா பதவியை ராஜினாமா செய்தார்.

அதிருப்தி

இதையடுத்தே தன் மருமகனும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜியை திரிணமுல் காங்., லோக்சபா கொறடாவாக நியமித்து, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மூத்த தலைவர்கள் கல்யாண் பானர்ஜி - மஹுவா மொய்த்ரா இடையே நீடிக்கும் மோதலால், முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை