உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியுடன் பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டி சந்திப்பு

காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியுடன் பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டி சந்திப்பு

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியை, அவரது நெருங்கிய நண்பரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான, ரமேஷ் கட்டி சந்தித்து பேசியது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலுக்கு முன்பு, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி ஆகிய இருவரும் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தனர்.காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். ஜெகதீஷ் ஷெட்டர் தோற்றார்; லட்சுமண் சவதி வெற்றி பெற்றார். தோற்றுப்போன ஜெகதீஷ் ஷெட்டருக்கு எம்.எல்.சி., பதவி கிடைத்தது. லட்சுமண் சவதி அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அதிருப்தியில் இருந்தாலும், வெளிகாட்டிக் கொள்ளவில்லை.இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில், காங்கிரசில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார்.அவரது பாணியில் லட்சுமண் சவதியும், பா.ஜ.,வில் இணைவார் என்று, அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் லட்சுமண் சவதி மறுத்தார்.ஆனாலும் அவரை பா.ஜ.,விற்கு இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது. அவர் மீண்டும் பா.ஜ.,வுக்கு வருவார் என்று, பா.ஜ., தலைவர்கள் வெளிப்படையாக அறிக்கை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில், லட்சுமண் சவதியை, அவரது நெருங்கிய நண்பரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான, ரமேஷ் கட்டி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் அரசியல் நிலவரம் குறித்து, விவாதித்து உள்ளனர். ரமேஷ் கட்டி மூலம், லட்சுமண் சவதிக்கு பா.ஜ., வலை விரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தலின்போது, ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தபோது, தன்னுடைய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., சங்கர் பாட்டீல் முனேனகொப்பாவை, அழைத்து வருவதாக கூறி இருந்தார். ஆனால் அவர் வரவில்லை. தற்போது, ஜெகதீஷ் ஷெட்டரை, சங்கர்பாட்டீல் முனேனகொப்பா, பா.ஜ.,வுக்கு அழைத்துச் சென்று உள்ளார்.இதே போன்று, லட்சுமண் சவதி மூலம், ரமேஷ் கட்டியை, காங்கிரசுக்கு இழுக்க முயற்சி நடந்தது. ஆனால் நடக்கவில்லை. தற்போது ஜெகதீஷ் ஷெட்டரை அவரது ஆதரவாளர் பா.ஜ.,வுக்கு இழுத்துச் சென்றது போல, லட்சுமண் சவதியை, ரமேஷ் கட்டி இழுத்து செல்லலாம் என்று கூறப்படுகிறது. இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ