தொழிலதிபர் அதானி மீது நடவடிக்கை; காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்
பெங்களூரு : ''மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், தொழிலதிபர் கவுதம் அதானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் குரல் எழுப்புவோம்.தற்போது அவர் (அதானி) இந்தியாவில் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல முறைகேட்டில் ஈடுபட்டதால், அவருக்கு எதிராக, மோடி எதுவும் பேசுவதில்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை துறையின் கீழ் வைத்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவர் மீது ஒரு விசாரணை கூட நடத்தவில்லை.கடந்த முறை ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக, நாங்கள் கேள்வி எழுப்பியபோது, இது வெளிநாட்டு விஷயம் என்றனர். முறைகேடு நடந்துள்ளதாக அவர்கள் (அமெரிக்கா) குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டு பொய் என்றால், அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரலாமே.அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை சொல்வதாக நீங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் ஹிண்டன்பர்க், அமெரிக்கா அதைத்தான் சொல்கின்றன.விமான நிலையம், துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிலங்கள், மின் துறைகளை நிர்வகிக்க, இந்தியாவின் சொத்துகளை அதானிக்கே கொடுக்கின்றனர்.அதானி சட்டப்படி செயல்பட்டிருந்தால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முறைகேடு செய்த அவருக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளித்து, உதவுகிறது.மற்ற மாநிலங்களுக்கு முதலீட்டாளர்களை கொண்டு செல்லாமல், தனது சொந்த மாவட்டமான குஜராத்தில் மட்டும் பல முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைத்துள்ளார். இதனால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வளர்ச்சி அடையாது.ஒருவரை மட்டும் பணக்காரராக்கினால், மற்ற சிறு தொழிலதிபர்கள் பாதிக்கப்படுவர். உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஆதரவளித்தால், மற்ற தொழிலதிபர்களுக்கு எப்படி ஊக்கம் அளிப்பீர்கள்.பொய் கணக்கு காட்டி, உலகத்திலேயே பணக்காரர் ஆக வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது போன்று தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.