பெங்களூரு: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியிடம் ஐந்து நாட்கள் விசாரிக்க, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 50. கோவாவில் பல சூதாட்ட விடுதிகளை நடத்துகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=32f10fne&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டவிரோதமாக ஆன்லைன் - ஆப்லைன் மூலம், 'பெட்டிங்' நடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து, வெளிநாடுகளில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்தார். சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டார். இதுபற்றி ஈ.டி., எனும் அமலாக்கத்துறை கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூரு உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, 12 கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிம் சென்றிருந்த வீரேந்திர பப்பி, கைது செய்யப்பட்டார். சிக்கிமில் இருந்து வீரேந்திர பப்பி நேற்று அதிகாலை, விமானத்தில் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந்த பின், பெங்களூரு 35வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சையத் பி.ரகுமான் வீட்டில், வீரேந்திர பப்பியை அமலாக்கத்துறையினர் ஆஜர் படுத்தினர். விசாரணை நடத்துவதற்காக அவரை, 14 நாட்கள் தங்கள் காவலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொண்டனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் 28ம் தேதி வரை ஐந்து நாட்கள் வீரேந்திர பப்பியிடம் விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து, சாந்தி நகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.