முடா வழக்கில் காங்., - எம்.பி., குமார் நாயக்கிற்கு... சிக்கல்! மைசூரு கலெக்டராக இருந்தபோது விதிமீறியதாக புகார்
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.முடாவிடம் இருந்து 14 வீட்டுமனைகள் வாங்கியதில், சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோரும் தவறு செய்யவில்லை என்று, 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முழுக்க, முழுக்க தவறு செய்தவர்கள் முடா அதிகாரிகள் தான் என்றும் கூறப்பட்டு இருந்தது. பொது பயன்பாடு
இந்நிலையில், முடா வழக்கில் ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான குமார் நாயக் உட்பட நான்கு பேர் மீது தவறு இருப்பதாக, லோக் ஆயுக்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.அதில் கூறியிருப்பதாவது:கடந்த 2004 - 2005ம் ஆண்டில், நிலத்தின் உரிமையாளர் தேவராஜ், தனது 3.16 ஏக்கர் விவசாய நிலத்தை, பொது பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு, மைசூரு நில ஆவண துறையிடம் விண்ணப்பம் அளித்தார். அப்போது மைசூரு கலெக்டராக, தற்போதைய ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.பி., குமார் நாயக், மைசூரு தாசில்தாராக மாலிகா சங்கர், வருவாய் ஆய்வாளராக சித்தப்பா, நில ஆவணங்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நில அளவையராக சங்கரப்பா ஆகியோர் இருந்தனர். நிலத்தை ஆய்வு செய்யாமல், கெசரே கிராமத்தின் வரைபடம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வரைபடம், தள அமைப்பு மேம்பாடு தொடர்பான வரைபடத்தை பயன்படுத்தி அறிக்கை தயாரித்துள்ளனர். அந்த அறிக்கையில் தேவராஜ் நிலம் காலியாக இருப்பதாக பட்டியலிடப்பட்டு உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை
அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையை குமார் நாயக் அங்கீகரித்து உள்ளார். இது, அதிகாரிகள் அலட்சியம் மற்றும் கடமை தவறுதலின் தெளிவான அறிகுறி. இருந்தாலும் இந்த தவறை அவர்கள் கூட்டு சேர்ந்து செய்தார்களா என்பது தெரியவில்லை. அந்த நிலத்தை தான் பிற்காலத்தில் தேவராஜ், மல்லிகார்ஜுன் சாமிக்கு விற்றுள்ளார்.இது பற்றி விசாரிக்க குமார் நாயக்கிற்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஒரு முறை மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். மற்ற இரண்டு முறையும் வரவில்லை. கடமை தவறிய அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 2016 முதல் 2022 வரை 50க்கு 50 திட்டத்தின் கீழ், முடா 1,095 வீட்டுமனைகளை ஒதுக்கி உள்ளது. இந்த நிலங்கள் நிலத்தின் உரிமையாளர்களுக்கு செல்லவில்லை. ரியல் எஸ்டேட் அதிபர்கள், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு சென்றன. முடா கமிஷனர் தினேஷ்குமார் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்.50க்கு 50 திட்டத்தை ரத்து செய்த பிறகும், தினேஷ்குமார் உத்தரவின்படி, 252 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து, எம்.பி., குமார் நாயக் கூறுகையில், ''முடா வழக்கில் என் மீது தவறு இருப்பதாக, லோக் ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது பற்றி எனக்கு தெரியாது. ஊடகங்களில் வந்த செய்தியை கவனித்தேன். அறிக்கையை பார்த்துவிட்டு விளக்கம் அளிக்கிறேன்,'' என்றார்.