உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பற்றிக்கொண்டது நாய் பிஸ்கட் விவகாரம் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விளக்கம்

பற்றிக்கொண்டது நாய் பிஸ்கட் விவகாரம் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விளக்கம்

புதுடில்லி, யாத்திரையின்போது, தான் அளித்த பிஸ்கட்டை நாய் ஏற்க மறுத்ததால், அதை அருகில் இருந்த தொண்டரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு

அந்த வீடியோவில், ஒருவர், கையில் நாயுடன் ராகுலின் வேனை நோக்கி வந்தார். அதைப் பார்த்ததும், தன் உதவியாளரிடம் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி, அதில் இருந்து ஒரு பிஸ்கட்டை அந்த நாய்க்கு ராகுல் வழங்கினார். அதற்கடுத்த பிஸ்கட் கொடுத்தபோது, அதை வாங்க நாய் மறுத்தது. அதைத் தொடர்ந்து அந்த பிஸ்கட்டை அந்தத் தொண்டரிடம் ராகுல் வழங்கினார்.நாய் வாங்க மறுத்த பிஸ்கட்டை தொண்டருக்கு அளித்து அவமதித்துள்ளதாக, ராகுல் மீது குற்றஞ்சாட்டி, சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.அதை நாய்க்கு வழங்குவதற்காக, அந்த தொண்டரிடம் ராகுல் கொடுத்துள்ளதாகவும், சிலர் பதிவிட்டுள்ளனர்.இந்நிலையில், இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் ஒரு பதிவை வெளியிட்டார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:நான் ஏற்கனவே பலமுறை கூறியபடி காங்கிரசில் நான் இருந்தபோது, ராகுலை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் ஒரு தட்டில் இருந்த பிஸ்கட்களை, தன் வளர்ப்பு நாய்க்கு வழங்கினார். எங்களுக்கும் அந்தத் தட்டில் இருந்து பிஸ்கட் வழங்கினார்.ராகுல் மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினர் யாரும் என்னை அதுபோன்ற பிஸ்கட்டை சாப்பிட வைக்க முடியாது. இதனால் உடனடியாக கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீடியோ

இது குறித்து ராகுல் கூறியதாவது:யாத்திரையின்போது, நாயும், அதன் உரிமையாளரும் நிற்பதை பார்த்து, அருகில் அழைத்தேன். கூட்டத்தை பார்த்ததும், அந்த நாய் நடுங்கியது. அதன் பயத்தை போக்குவதற்காக, நாய்க்கு பிஸ்கட் கொடுத்தேன். ஆனாலும், அது தயங்கியது.இதனால், அதன் உரிமையாளரிடமே பிஸ்கட்டை கொடுத்து, நாய்க்கு கொடுக்கும்படி கூறினேன். இதை பெரிய விஷயமாக்கி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே நேற்று, ஜார்க்கண்டின் கும்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் கூறுகையில், ''இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமாகவே, மம்தா பானர்ஜி இருக்கிறார். கூட்டணி கட்சி தலைவர்களிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்