| ADDED : ஆக 30, 2024 01:19 PM
புதுடில்லி: லோக்சபா தேர்தலின் போது 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுலுக்கு தேர்தல் செலவாக ரூ.1.40 கோடி வழங்கி உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கணக்கு தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், பின்னர் ரேபரேலி தொகுதியை மட்டும் தக்க வைத்தார். விதிகளின் படி ஒரு எம்.பி. பதவியை தான் வகிக்கவேண்டும் என்பதால் வயநாடு எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்துவிட இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்காக போட்டியிடுகிறார்.இந்நிலையில், கட்சியின் தேர்தல் செலவுகள் பற்றிய ஒரு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் ராகுலுக்கு 2 தொகுதிகளிலும் தலா ரூ.70 லட்சம் என்று மொத்தமாக ரூ.1.40 கோடியை கட்சி நிதியில் இருந்து தேர்தல் செலவுக்காக வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இவர் தவிர கட்சியில் மேலும் சிலருக்கு வழங்கிய நிதி பற்றியும் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.அதன்படி, ஸ்மிருதி ராணியை தோற்கடித்த கிஷோரிலால் சர்மா, ஆலப்புழாவில் களம்கண்ட கே.சி. வேணுகோபால், விருதுநகரில் மாணிக் தாகூர் ஆகியோருக்கு தலா ரூ.70 லட்சம் அளிக்கப்பட்டு உள்ளது. மண்டி தொகுதியில் போட்டியிட்டு பிரபல நடிகை கங்கனா ரனாவத்திடம் தோற்ற விக்ரமாதித்ய சிங்கிற்கு ரூ.87 லட்சம் தேர்தல் செலவுக்காக கட்சி நிதியாக தரப்பட்டு உள்ளது.