பெங்களூரில் தொடரும் மழை; குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்
பெங்களூரு : 'கர்நாடகாவின் பல மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்யும். பெங்களூரில் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக, மழை வாட்டி வதைக்கிறது. நேற்று காலையே மழை துவங்கிவிட்டது. மெஜஸ்டிக், சாந்திநகர், தியாகராஜ நகர், ஜெயநகர், சிவாஜி நகர், ஜெ.பி.நகர், கே.ஆர்.மார்க்கெட், டவுன் ஹால், கார்ப்பரேஷன், மைசூரு சாலை, மாரத்தஹள்ளி உட்பட பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.மக்கள் வீட்டில் இருந்து, வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். ஞாயிறு விடுமுறையை கழிக்க, வெளியே செல்ல விடாமல் மழை முட்டுக்கட்டை போட்டது. பல இடங்களில் சாலைகள் ஏரிகளாக மாறின. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, பிரச்னையை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் மழை மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இது குறித்து, வானிலை ஆய்வு மைய வல்லுனர் சி.எஸ்.பாட்டீல் கூறியதாவது:கர்நாடகாவின் தென் மாவட்டங்களில், இன்று (நேற்று) பரவலாக மழை பெய்துள்ளது.வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் மழை பெய்கிறது. குறிப்பாக ஷிவமொக்காவில் 10 செ.மீ., ஹொஸ்கோட்டில் 8 செ.மீ.,, பீதரில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.கடலோர பகுதிகளின் காற்று 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசுகிறது. இதன் விளைவாக பல்வேறு மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்களும், பெங்களூரில் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது.உத்தரகன்னடா, உடுப்பி, பெலகாவி, தார்வாட், ஹாவேரி, பாகல்கோட், கதக், கொப்பால், ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், சித்ரதுர்கா, ஹாவேரி, தாவணகெரே, பல்லாரி, துமகூரு, சிக்கபல்லாபூர், கோலார், பெங்களூரு, ராம்நகர் மாவட்டங்களின் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இம்மாவட்டங்களில் 'மஞ்சள் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் நாளை (இன்று) இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.