உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று... ஓட்டு எண்ணிக்கை! தே.ஜ., கூட்டணி ஜெயித்தால் காங்., அரசு கவிழுமா?

3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று... ஓட்டு எண்ணிக்கை! தே.ஜ., கூட்டணி ஜெயித்தால் காங்., அரசு கவிழுமா?

பெங்களுரு: கர்நாடகாவில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் வேட்பாளர்கள், 'திக்திக்' மனநிலையில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், காங்கிரஸ் அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, ஹாவேரியின் ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை, பல்லாரியின் சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம். இவர்கள் மூன்று பேரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆகினர். இதனால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், மூன்று தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளராக, பா.ஜ.,வில் இருந்து விலகிய யோகேஸ்வர், பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த., வேட்பாளராக குமாரசாமி மகன் நிகில், ஷிகாவியில் பா.ஜ., வேட்பாளராக பசவராஜ் பொம்மை மகன் பரத், காங்கிரஸ் வேட்பாளராக யாசிர் அகமதுகான் பதான், சண்டூரில் காங்கிரஸ் வேட்பாளராக அன்னபூர்ணா, பா.ஜ., வேட்பாளராக பங்காரு ஹனுமந்த் போட்டியிட்டனர்.

கருப்பர் விமர்சனம்

இடைத்தேர்தல் நடந்த மூன்று தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும் என்று ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் கணக்கு போட்டனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.குறிப்பாக, சென்னப்பட்டணாவில் எப்படியாவது வெற்றி பெற்று, ராம்நகர் மாவட்டத்தில் இருந்து குமாரசாமி குடும்பத்தை விரட்ட வேண்டும் என்பதில், சிவகுமார் கண்ணும், கருத்துமாக செயல்பட்டார். மற்ற இரண்டு தொகுதிகளை விட சென்னப்பட்டணா தேர்தல் களத்தில் அனல் பறந்தது. மத்திய அமைச்சர் குமாரசாமியை கருப்பர் என்று, அமைச்சர் ஜமீர் அகமதுகான் விமர்சனம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவகவுடா பிரசாரம்

ஏற்கனவே இரண்டு முறை தேர்தலில் தோற்ற நிகிலை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில், 92 வயதான தேவகவுடாவும் பிரசாரத்தில் களம் இறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஒரு இடத்திலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இது, ஆளுங்கட்சி தலைவர்களை பயத்தில் ஆழ்த்தி உள்ளது.மேலும், ஜமீர் அகமதுகான், குமாரசாமியை கருப்பர் என விமர்சித்ததால் தனக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று யோகேஸ்வரும் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், ௩ தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. தங்கள் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பில், ஆறு வேட்பாளர்களும் மனதில் படபடப்புடன் காத்திருக்கின்றனர். இன்று பகல் 11:00 மணிக்குள் யார் வெற்றி பெறுவர் என்று தெரிந்து விடும். தங்கள் தலைவர்கள் வெற்றியை கொண்டாட கட்சியின் தொண்டர்களும் தயாராகி வருகின்றனர்.

பதவிக்கு ஆப்பு

சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் பதவி கேட்டு மேலிடத்திற்கு அழுத்தம் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. ஷிகாவியில் கட்சியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, முதல்வர் தோளில் விழுந்தது. அங்கு கட்சி தோற்றால், அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, 'முடா' வழக்கில் சிக்கி உள்ள அவரை, எப்படியாவது முதல்வர் பதவியில் இருந்து இறக்கி விட வேண்டும் என்பதில், எதிர்க்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கிடையில், அரசை கவிழ்க்க 50 எம்.எல்.ஏ.,க்களிடம் தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பா.ஜ., மீது முதல்வரும் குற்றச்சாட்டு கூறி இருந்தார். தங்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்காததால் அரசு மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கோபத்தில் உள்ளனர். இடைத்தேர்தல் முடிந்த பின், காங்., அரசு கவிழும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆரூடம் கூறினர். இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெற்றால், காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களில், காங்., அரசு நீடிக்குமா, கவிழுமா என்பதற்கு விடை கிடைத்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

INDIAN
நவ 25, 2024 15:15

Karnataka bypolls: Congress makes a clean sweep, bagging all three seats The Congress won Channapatna, Sandur, and Shiggaon with comfor margins Updated - November 23, 2024 10:24 pm IST - பெங்களூரு இது தி ஹிந்து பத்திரிகை செய்தி , ஒருவேளை மூன்று தொகுதிகளில் தோற்றால் கூட எப்படி காங்கிரஸ் ஆட்சி கவிழும், பாஜகவை இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பது சரியல்ல


புதிய வீடியோ