உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளமையை மீட்கும் கால இயந்திரம் காட்டி ரூ.35 கோடி சுருட்டிய தம்பதி எஸ்கேப்

இளமையை மீட்கும் கால இயந்திரம் காட்டி ரூ.35 கோடி சுருட்டிய தம்பதி எஸ்கேப்

கான்பூர், இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்ட, 'டைம் மிஷின்' எனப்படும், கால இயந்திரத்தின் வாயிலாக இளமையை மீட்டெடுக்கலாம் எனக்கூறி, முதியவர்களிடம் 35 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தர பிரதேசத்தின் கான்பூரில், ராஜிவ்குமார் துபே - ராஷ்மி தம்பதி, 'ரிவைவல் வேர்ல்டு' என்ற நிலையத்தை துவக்கினர். மேற்காசிய நாடான இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்ட கால இயந்திரம் தங்களிடம் இருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டனர்.இந்த இயந்திரத்தின் வாயிலாக, 'ஆக்சிஜன் தெரபி' அளிக்கப்படும் என்றும், அதில் இருந்து கிடைக்கும் சுத்தமான பிராணவாயுவை தொடர்ந்து சுவாசித்தால், 60 வயது முதியவர், 25 வயது இளைஞரை போல தோற்றமளிக்க முடியும் எனவும், தெரிவித்தனர்.கால இயந்திரத்தின் வாயிலாக, இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என அள்ளிவிட்டு முதியவர்களை நம்ப வைத்தனர்.இந்த பிராணவாயு சிகிச்சைக்கு, 6,000 முதல் 90,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்தனர். இவர்களின் வாக்குறுதியை நம்பி ஏராளமான முதியவர்கள் இங்கு வாடிக்கையாளர்களாகினர். இதில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, ரேணு சிங் என்ற மூதாட்டி போலீசில் புகார் அளித்தார். ராஜிவ் - ராஷ்மியின் பொய்களை நம்பி, 10.75 லட்சம் ரூபாய் இழந்ததாகவும், இவரை போல பலர், 35 கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள டுபாக்கூர் தம்பதியை தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !