சபாநாயகர் மீதான வழக்கு தள்ளுபடி செய்தது கோர்ட்
புதுடில்லி, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதுாறு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவின் இணை செயலராக இருப்பவர் பாபு முருகவேல். இவர், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.அதில், 'கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்ததாக, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசினார்' என, குறிப்பிட்டு இருந்தார்.இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'அரசியல் தலைவர்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதை அவதுாறாக கூற முடியாது. நீங்கள் ஏதோ வினோதமாக நடந்ததாக கூறுகிறீர்கள். இதை கையாளுவதற்காகத் தான் கட்சித் தாவல் தடை சட்டம் உள்ளது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து, மனுவை திரும்ப பெறுவதாக பாபு முருகவேல் தரப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.