முருகா மடத்தின் சிவமூர்த்தி சுவாமிகள் ஜாமின் தடையை நீக்கியது கோர்ட்
'போக்சோ' வழக்கில் கைதாகி, சிறையில் இருந்த முருகா மடத்தின் சிவமூர்த்தி சரணரு சுவாமிகள் ஜாமின் மீதான தடையை நீதிமன்றம் நீக்கியது. அவர் நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.கர்நாடகாவின் பிரபலமான மடங்களில் சித்ரதுர்காவின் முருகா மடமும் ஒன்று. இதன் மடாதிபதியாக இருந்த சிவமூர்த்தி முருகா சரணரு மீது, பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.மடம் நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவியரை, மடாதிபதி பலாத்காரம் செய்ததாக, இரண்டு மாணவியர் மைசூரின் ஒடனாடி அமைப்பின் உதவியுடன், நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த வழக்கு சித்ரதுர்கா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.'போக்சோ' சட்டத்தில் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு, 2022 செப்டம்பர் 1ல் கைது செய்யப்பட்டார். அன்று முதல், சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2023 நவம்பர் 11ல் கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. 'தன் செல்வாக்கை பயன்படுத்தி, சாட்சிகளை கலைக்க சிவமூர்த்தி சரணரு முயற்சிக்கலாம். எனவே ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல் முறையீடு செய்தது.இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 'வழக்கின் சாட்சிகளை விசாரித்து முடியும் வரை, சிவமூர்த்தி சரணருவை விடுதலை செய்ய வேண்டாம்' என, உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு மாணவியர், 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.இதனால் ஜாமின் மீதான தடையை நீக்க வேண்டும் என, சித்ரதுர்கா இரண்டாவது மாவட்ட கூடுதல் மற்றும் சிவில் நீதிமன்றத்தில், சிவமூர்த்தி சரணரு மனுத் தாக்கல் செய்தார்.நீதிமன்றமும் தடையை நீக்கி, அவரை விடுதலை செய்யும்படி, நேற்று உத்தரவிட்டது. இதன்படி நேற்று மாலை, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.அங்கிருந்து தாவணகெரேவின், சிவயோகி ஆசிரமத்துக்கு சென்றார். அவர் அளித்த பேட்டி:சுவாமிகளுக்கு பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தால் எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தும் விடுபடலாம். சத்தியத்துக்கு வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். பக்தர்கள் நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும்.முதன் முறை சிறைக்கு சென்றபோது, 250 புத்தகங்கள் படித்தேன். இரண்டாவது முறை சென்றபோது, 150 புத்தகங்களை படித்தேன். அறிவை சம்பாதிக்க அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறேன்.கிடைத்த நேரத்தை, நல்ல முறையில் பயன்படுத்தினேன். அது மட்டுமின்றி, நான்கைந்து புத்தகங்களை எழுதினேன். இவற்றை வெளியிடுவேன்.நான் தாவணகெரே சிவயோகி ஆசிரமத்தில் தங்குவேன். பக்தர்கள் என்னை சந்திக்கலாம். நாங்கள் இருப்பதே பக்தர்களை சந்திப்பதற்காகத்தான்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -