| ADDED : மே 07, 2024 10:27 PM
புதுடில்லி: பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த அப்பாவிகள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள், குற்றப்பின்னணி உடையோர் பட்டியலில் தன்னிச்சையாக சேர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆம் ஆத்மி கட்சியின் டில்லியை சேர்ந்த எம்.எல்.ஏ., அமானத்துல்லா கானை குற்றப்பின்னணி உள்ளவராக டில்லி போலீசார் கடந்த ஆண்டு அறிவித்தனர். இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:டில்லி அரசு எடுத்துள்ள முடிவு கவலை அளிக்கிறது. குற்றப்பின்னணி உடையவர் என்ற ஆவணம், போலீஸ் துறைக்கு மட்டுமான பொது ஆவணமாகும். அது பொதுவெளிக்கு கொண்டுவரப்பட கூடாது. அடுத்தபடியாக, குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்கு குறைவான சிறுவர்களின் அடையாளம் வெளியிடப்படாமல் இருப்பதில் போலீசார் அதிக அக்கறை காட்டவேண்டும்.குற்றப்பின்னணி உடையவர்களின் ஆவணங்களை அவ்வப்போது தணிக்கை செய்ய இணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரியை டில்லி கமிஷனர் நியமிக்க வேண்டும்.எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியுள்ள அப்பாவி தனிநபர்களின் பெயர்கள் குற்றப்பின்னணி உடையோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதை, மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீசார் உறுதி செய்ய வேண்டும்.இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.