மகளிடம் அத்துமீற முயன்றவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி:சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனுக்கு, ஜாமின் வழங்க மறுத்த டில்லி நீதிமன்றம், அந்த நபரின் ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது.டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷிவானி சவுகான் முன், ஜாமின் கோரி, ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன் ஆஜரான, கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் அருண் வாதிட்டதாவது:ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள நபர், தன் மனைவியை கொடூரமாக கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செய்தது மிகப் பெரிய குற்றம். அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது.சம்பவம் நடந்த, 2023 நவம்பர் 7 - 8ம் தேதி இரவில், ஒன்பது வயதே ஆன, தன் சொந்த பெண் குழந்தையிடம் அந்த நபர் தவறாக நடக்க முயன்றார்.அதை பார்த்த அவரின் மனைவி, அவரிடம் சண்டையிட்டு, தடுத்தார். இந்த விவகாரத்தை மறுநாள் காலையில் எழுப்பி, மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட இந்த நபர், அந்த சிறுமி பக்கத்து அறைக்கு சென்றிருந்த நேரத்தில், மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றார். இப்போது, தான் செய்த கொலையை நேரில் கண்ட சாட்சி இல்லை என வாதிடுகிறார். ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் வழங்கக் கூடாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.அதை கேட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷிவானி சவுகான், அந்த நபருக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.