டில்லி போலீசார் அலட்சியம் கோர்ட் கடும் கண்டனம்
புதுடில்லி:கடந்த 2020ல் நடந்த டில்லி கலவர வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தேவையான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்காத டில்லி போலீசாருக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்தது.கடந்த 2020ல், டில்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரவீன் சிங், விசாரித்து வருகிறார். அவரிடம் கூடுதல் குற்றப்பத்திரிகை, தடயவியல் அறிக்கை, ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவ் போன்றவை கடந்த 4ம் தேதி வழங்கப்பட்டன.ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு அந்த ஆதாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை. டில்லி போலீசாரின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பிரவீன் சிங், அவற்றை வழங்க, டில்லி வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.பின், இந்த வழக்கை வரும் 18 ம் தேதி விசாரிக்க தள்ளிவைத்தார்.