உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியானார் சி.பி.ராதாகிருஷ்ணன்

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியானார் சி.பி.ராதாகிருஷ்ணன்

நாட்டின், 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 68, நேற்று தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை அவர் வீழ்த்தினார். நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, கடந்த ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தியது. ஓட்டுப்பதிவு இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய, செப்., 9ல் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச் செயலர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றி உறுதி என்ற நிலையிலும், வீம்புக்காகவே, காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி, தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை, 79, வேட் பாளராக அறிவித்தது.  இந்நிலையில், டில்லியில் பார்லிமென்டின் முதல் தளத்தில் உள்ள வசுதா அரங்கில், துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. திட்டமிட்டபடி, காலை 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், முதல் நபராக, பிரதமர் நரேந்திர மோடி ஓட்டளித்தார். இதன்பின், ஹிமாச்சல் வெள்ள பாதிப்பை பார்வையிட புறப்பட்டுச் சென்றார். அவர் சென்றதும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவ்ராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு, எல்.முருகன் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவருமே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாரயணன் உள் ளிட்டோரும் ஓட்டளித்தனர். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் காலை யிலேயே ஓட்டளித்தனர். புறக்கணிப்பு சிறையிலிருக்கும் ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்.பி., 'இன்ஜினியர்' ரஷீத், தேர்தல் கமிஷன் அனுமதியோடு தபால் ஓட்டு போட்டதாக தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சக்கர நாற்காலியில் வந்து ஓட்டளித்தார். கனிமொழி, பாலு உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் காலையிலேயே ஓட்டளித்தனர். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தம்பிதுரை, சண்முகம், இன்பதுரை, தனபால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., தர்மர் ஆகியோர் ஒன்றாக வந்து ஓட்டளித்தனர். பிற்பகல் 3:00 மணிக்கே, 96 சதவீத ஓட்டுகள் பதிவானதாக ராஜ்யசபா செயலகம் தெரிவித்தது. மாலை 5:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், 6:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. லோக்சபா, ராஜ்யசபாவின் மொத்த பலம், 788. இதில் ராஜ்யசபாவில் ஆறு; லோக்சபாவில் ஒரு இடம் காலியாக இருப்பதால், 781 எம்.பி.,க்கள் ஓட்டளிக்க தகுதியானவர்கள். பாரத் ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம் ஆகியவை தேர்தலை புறக்கணித்த நிலையில்,மொத்தம் 767 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். வெற்றிக்கு, 384 ஓட்டுகள் தேவை என்ற நிலையில், 452 ஓட்டுகள் பெற்று, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இண்டி கூட்டணியின் பி.சுதர்சன் ரெட்டி, 300 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

12ல் பதவியேற்பு

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.

யார் அந்த 14 பேர்?

பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 427 எம்.பி.,க்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆதரவு வழங்கியது. இக்கட்சிக்கு, 11 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன்படி பார்த்தால், தே.ஜ., கூட்டணியின் மொத்த பலம், 438. ஆனால், 14 ஓட்டுகள் கூடுதலாக, அதாவது, 452 ஓட்டுகள் பெற்று, சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், 315 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக சொன்ன இண்டி கூட்டணி, 300 ஓட்டுகளையே பெற்றுள்ளது. இதனால், அக்கூட்டணியின் 15 எம்.பி.,க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், செல்லாத ஓட்டுகளை போட்ட 15 எம்.பி.,க்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புறக்கணித்த கட்சிகள்

ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது. இக்கட்சிக்கு ராஜ்யசபாவில் ஏழு எம்.பி.,க்கள் உள்ளனர். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியும் தேர்தலை புறக்கணித்தது. இக்கட்சிக்கு, நான்கு எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். பஞ்சாபில் செயல்படும் சிரோண்மணி அகாலி தளமும் தேர்தலை புறக்கணித்தது. இக்கட்சிக்கு லோக்சபாவில் ஒரேயொரு எம்.பி., மட்டுமே உள்ளார்.

அதிகம்... குறைவு...

* துணை ஜனாதிபதி தேர்தலில் அதிக ஓட்டு (699) வித்தியாசத்தில் வென்றவர் கே.ஆர்.நாராயணன். 1992ல் காங்., சார்பில் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஜோகிந்தர் சிங், ஒரு ஓட்டு மட்டும் பெற்றார்.* குறைந்த வித்தியாசத்தில் (149) வென்றவர் பைரோன் சிங் ஷெகாவத். 2002ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவருக்கு 454 ஓட்டு கிடைத்தது. காங்கிரசின் சுஷில்குமார் ஷிண்டே 305 ஓட்டு பெற்றார்.* 1952, 1957ல் எஸ்.ராதாகிருஷ்ணன், 1979ல் இதயதுல்லா, 1987ல் சங்கர் தயாள் சர்மா ஆகிய மூவர் போட்டியின்றி தேர்வாகினர்.* தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் (1952, 1957), ஹமீத் அன்சாரி (2007, 2012).* பதவியில் இருக்கும் போது மறைந்த ஒரே துணை ஜனாதிபதி கிருஷன் காந்த் (1997 - 2002).* எஸ்.ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், வி.வி.கிரி, ஜி.எஸ்.பதக், இதயதுல்லா ஆகிய ஐவர் கட்சி சாராதவர்கள்.* காங்., சார்பில் ஜாட்டி, சங்கர்தயாளர் சர்மா, வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், ஹமித் அன்சாரி என ஐந்து பேர் தேர்வாகினர்.* பா.ஜ., சார்பில் பைரோன் சிங் ஷெகாவத், வெங்கையா நாயுடு, ஜக்தீப் தன்கர், சி.பி.ராதாகிருஷ்ணன் என நான்கு பேர் தேர்வாகினர்.* ஜனதா தளம் சார்பில் கிருஷன் காந்த் தேர்வானார்.

இரண்டாவது தமிழர்

ஆர்.வெங்கட் ராமனுக்கு (1984 -- 1987) அடுத்து துணை ஜனாதிபதியான இரண்டாவது தமிழர் ஆனார், சி.பி.ராதாகிருஷ்ணன். விளையாட்டு ஆர்வம் கல்லுாரியில் படித்த போது டேபிள் டென்னிசில் சாம்பியன், ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். கிரிக்கெட், வாலிபால் இவருக்கு பிடித்த விளையாட்டுகள்.

'பயோடேட்டா'

1957 அக்., 20 திருப்பூரில் பிறந்தார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., முடித்துள்ளார் 1996தமிழக பா.ஜ., செயலர் 1998, 1999கோவையில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு2003 - 2006 தமிழக பா.ஜ., தலைவர் 2004இந்தியா சார்பில் ஐ.நா., சபைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம் பெற்றார் 2016தேசிய கயிறு வாரிய தலைவர் 2023 பிப்., 12ஜார்க்கண்ட் கவர்னர் ஜூலை 27மஹாராஷ்டிரா கவர்னர் 2025 ஆக., 17தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செப்., 9துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Santhakumar Srinivasalu
செப் 10, 2025 12:33

அரசு சம்பளம் மற்றும் சலுகைகளை பெறும் எம்பிக்கள் ஓட்டளிக்க தெரியாம செல்லாத ஓட்டு போட்டது மிக்க கேவலம்!


Anand
செப் 10, 2025 11:19

செல்லாத ஓட்டு போட்ட புண்ணியவான்கள் யார் யார் என தெரிவியுங்கள்...


தமிழன்
செப் 10, 2025 10:03

ஒட்டு போட கூட தெரியாதவர்லாம் எம் பி இவங்கில்லாம நாட்டை காப்பாத்த


BALAJI
செப் 10, 2025 09:56

துணை ஜனாதிபதியாக இருந்து என்ன பண்ண போறார்


vivek
செப் 10, 2025 12:33

எதுக்கு கோயம்புத்தூரில் இருந்து எதுக்கும் உதவாத மொக்கை கருத்து...


தமிழன்
செப் 10, 2025 09:55

ஆமா தமிழன் தமிழ் என் மூச்சு என் பேச்சு இல்லனா உயிர் போச்சுனு ஒரு மானஸ்தன் இருந்தார் அவர தேடுறேன் காணோம் சரி நம்ம ஆள் துணை ஜனாதிபதிக்கு நிற்கிறாறேன்னு ஒரு அறிக்கை உண்டா அப்படினா கட்சி களவாணிதனம் தான் முக்கியம்


yts
செப் 10, 2025 08:19

இந்தி கூட்டணி பிரதமரையே டம்யா வைத்திருந்த ... ஒருவரின் புலம்பல் மிகவும் அதிகமாக தெரிகிறது


Oviya Vijay
செப் 10, 2025 07:28

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்ப் நின்ற போது நம் ஜீயின் நெருங்கிய நண்பர் எனக்கூறி இங்கிருக்கும் சங்கிகள் அவர் வெற்றி பெற வேண்டுமென எவ்வாறு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்களோ. இப்போது ஏன் தான் அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தோம் என அந்நாட்டு மக்களே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் இவரையும் ஏன் தேர்ந்தெடுத்தோம் என நினைக்குமளவிற்கு இவரது நடவடிக்கைகள் இருக்கப் போகிறது... தலைக்கனம் பிடித்த இவர் துணை ஜனாதிபதி பதவிக்குத் துளியும் தகுதியானவர் அல்ல...


vivek
செப் 10, 2025 07:38

உன்னை பார்த்த பாவமா இருக்கு..


vivek
செப் 10, 2025 07:39

ரெண்டு கிலோ ஜெலுசில் பார்சல்


vivek
செப் 10, 2025 07:40

புலம்புவது காமெடி யா இருக்குப்பா..புலம்பு கதறு


vivek
செப் 10, 2025 07:55

முட்டு குடுத்து முட்டி தெறிசுது தான் மிச்சம்


Karuna
செப் 10, 2025 06:33

The true colours of DMK is now clear. In every action they used to cry for Tamil whereas in actual they are totally anti Tamil inventing lame excuse. This is the order of the day..


Muralidharan raghavan
செப் 10, 2025 10:49

கரெக்ட்


Palanisamy Sekar
செப் 10, 2025 06:29

சி பி ராதாகிருஷ்ணின் வெற்றியானது உறுதியான ஒன்று என்றாலும் எதிர் அணியிலிருந்து பதினைந்து ஓட்டுக்கள் இவருக்கு கிடைத்தது இண்டி கூட்டணிக்கு கிடைத்த எச்சரிக்கை மணி. இதிலிருந்து தெரிகின்றது இண்டி கூட்டணியில் கடமையே என்றுதான் இருக்கின்றார்கள். இண்டி கூட்டணி நம்ம வைகோவின் மக்கள் நலக்கூட்டணி போலத்தான் போலும். தேமேன்னு கிடந்த முன்னாள் நீதியரசரை கூப்பிட்டு அசிங்கம் செய்து அனுப்பிவிட்டது இண்டி கூட்டணி. எவருக்காவது தெரியவேண்டாமா இதில் வெற்றிபெற முடியாதுன்னு. அவருக்கும் ஒரு பேராசைதான் போலும். அப்போ முன்னாள் இந்நாள் நீதிபதிகள் காங்கிரசின் ஆதரவு நபர்களாகத்தான் இருக்கின்றார்கள் போலும். எப்படியோ இந்தி கூட்டணியின் தோல்வி இந்தியாவுக்கே வெற்றிதான்.


Kasimani Baskaran
செப் 10, 2025 05:28

வாழ்த்துகள். மேலவையில் தீம்க்காவினர் அத்து மீறினால் தமிழில் திட்டலாம்.


புதிய வீடியோ