உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைம் பீட்

கிரைம் பீட்

மேம்பாலத்திலிருந்து விழுந்து காரில் அடிபட்டு உயிரிழப்பு

புதுடில்லி:கிழக்கு டில்லியின் பாண்டவர் நகர் பகுதியில் நேற்று நிகழ்ந்த விபத்தில், 49 வயது நபர் மேம்பாலத்திலிருந்து துாக்கி வீசப்பட்டு, கீழே விழுந்து காரில் அடிபட்டு இறந்தார். தேசிய நெடுஞ்சாலை 24ல் மங்கலம் கட் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்த ராகேஷ்குமார் அகர்வால், 49, என்ற நபர், பைக்கில் சென்றாரா அல்லது நடந்து சென்றாரா என்பது தெரியவில்லை. காசியாபாத் அருகே உள்ள இந்திராபுரம் என்ற பகுதியை சேர்ந்த அவர், மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து, கார் ஒன்றில் அடிபட்டு இறந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை, காசிப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் அமித் குமார் என்பவர் தன் ஆட்டோவில் துாக்கி போட்டு, அருகில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். எனினும், அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் பாண்டவநகர் போலீசார், மேம்பாலத்திலிருந்து அவர் துாக்கி வீசப்பட்டது எவ்வாறு என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் வேன் மோதியதில் டீ கடைக்காரர் பரிதாப பலி

புதுடில்லி: போலீஸ் கண்ட்ரோல் அறை வேன் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக ஓடி, டீக்கடை ஒன்றில் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 55 வயது மாற்றுத் திறனாளி மீது மோதியது. இதில், அவர் இறந்தார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: மத்திய டில்லியின் மந்திர்மார்க் என்ற பகுதியை சேர்ந்த கங்காராம் என்ற, 55 வயது நபர், தன் டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக ஓடி, சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. உத்தர பிரதேசத்தின் கோண்டா என்ற பகுதியை பூர்வீகமாக கொண்ட கங்காராமின் மனைவி இப்போதும் அந்த ஊரில் தான் இருக்கிறார். மகனுடன் டில்லியில் உள்ள டீக்கடையை கவனித்து வந்த மாற்றுத் திறனாளி, போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாகனம் மோதியதில் இறந்தார். விபத்து நடந்த போது, கங்காராமின் மகன், மேல் அறையில் துாங்கிக் கொண்டிருந்தார். இதனால், அவர் உயிர் தப்பினார். இதையடுத்து, அந்த போலீஸ் வேனில் இருந்த இரண்டு போலீசாரின் உடல் நிலை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் மது ஏதும் அருந்தியிருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1,559 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

புதுடில்லி:டில்லியில் அப்பாவி மக்களிடம் பறிக்கப்பட்ட 1,559 மொபைல் போன்கள், நேற்று முன்தினம் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து, இதுவரை, 6,532 மொபைல் போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை டில்லி போலீஸ் கமிஷனர் அறையில் நடந்த நிகழ்ச்சியில் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பங்கேற்று, பறிக்கப்பட்ட மொபைல் போன்களை மீட்க உதவிய 13 பேருக்கு நன்றி தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில், 22 போலீஸ் அதிகாரிகள் பாராட்டப்பட்டனர். பறிக்கப்பட்ட மொபைல் போன்களை மீட்க உதவியதற்காக அவர்களுக்கு இந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரூ.100 கோடி முறைகேடு முன்னாள் வக்கீல் கைது

புதுடில்லி:டில்லியில், அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், முன்னாள் வழக்கறிஞர் ஒருவரும் அடக்கம். சஞ்சய் என்ற அந்த நபர், கீதா காலனி என்ற இடத்தை சேர்ந்தவர். அவரும், அவரின் கூட்டாளிகள் சிலரும், அப்பாவி மக்களை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர். 'துவக்கத்தில், மாதம் தோறும் 8 சதவீதம் வட்டி கொடுக்கப்படும். அதன் பின், மாதம் தோறும், 4 சதவீதம் வட்டியுடன், அசலின் 4 சதவீதம் சேர்த்து வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறினர். ஆண்டுக்கு, 8 சதவீதம் அளவுக்கு மட்டுமே வட்டியை சம்பாதித்து வந்த பலரும், மாதம் தோறும் 8 சதவீதம் வட்டி தரப்படும் என கூறியதால், ஏராளமாக முதலீடு செய்தனர். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி, துவக்கத்தில் சில மாதங்கள் அவர்கள் கூறியபடி, 8 சதவீத வட்டியை கொடுத்தனர். அதன் பின் நிறுத்தி விட்டனர். இதையடுத்து, பலரும் அந்த மோசடி நிறுவனத்தின் மீது போலீசில் புகார் தெரிவிக்கத் துவங்கினர். அதையடுத்து, போலீசார் விசாரிக்க துவங்கினர். அதில் தான், 100 கோடி ரூபாய் அளவுக்கு அப்பாவி மக்களை ஏமாற்றி இருந்தது தெரிந்தது. அதையடுத்து, சஞ்சய் மற்றும் சிலரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த நபர்கள் மீது டில்லி, ஹரியானா, உத்தராகண்ட் போன்ற பல மாநிலங்களிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி