கிரைம் டைரி: போதைப்பொருள் கடத்திய வீரர் காதலி, கூட்டாளியுடன் கைது
புதுடில்லி:போதைப்பொருட்களை மணிப்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு கடத்தி சென்றதாக, ராணுவ வீரர், அவரின் பெண் காதலி மற்றும் கூட்டாளி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லி அருகே உள்ள கலிண்டி குஞ்ச் பகுதியில் வந்த காரை, போலீசார் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அந்த காரில் பயணித்த ராணுவ வீரர், அவரின் பெண் காதலி மற்றும் கூட்டாளி ஆகியோரிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணமாக பேசினர்.அந்த காரை மேலும் தீவிரமாக ஆராய்ந்த போது, 18 ஒபியம் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, அந்த மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வசமிருந்த ராணுவம் வழங்கியிருந்த கைத்துப்பாக்கி, ஒபியம் போதைப் பொருள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்
19 வயது தாதா படுகாயம்
புதுடில்லி:டில்லியில் நேற்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தாதா கும்பலில் இருந்த 19 வயது நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.டில்லியின் வட மேற்கு பகுதியில் உள்ள மஜ்லிஸ் பார்க் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நேற்று அதிகாலை, 3:50 மணிக்கு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நிதின் என்ற, 19 வயது நபர், போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க, போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார்.பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நிதின் காலில் படுகாயம் அடைந்தார். கீழே விழுந்த அவரை போலீசார் கைது செய்தனர். டில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியை சேர்ந்த நிதின், இளம் வயதிலேயே பல வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததால், போலீசார் அவரை தேடி வந்தனர். இப்போது அவரை கைது செய்துள்ளதால், பல வழக்குகள் முடியும் நிலையை அடைந்துள்ளன.கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் இருந்து மோட்டார் பைக், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்ப்பட்டன.ரூ.2,000 கடன் தகராறு
கத்தி குத்தில் ஒருவர் பலி
புதுடில்லி:டில்லியில், 2,000 ரூபாய் கடனுக்காக, கத்தியால் குத்தப்பட்டவர் பலியானார்டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஜப்ராபாத் என்ற பகுதியை சேர்ந்த அதில் என்பவர், பர்தீன் என்பவரிடம், 2,000 ரூபாய் கடனாக பெற்றிருந்தார். அந்த பணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக, நேற்று காலை 12:10 மணிக்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அதில், பர்தீனை குத்தியதில், அவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்து அதில் தப்பி ஓடினார். அருகில் நின்றிருந்த பர்தீனின் தந்தை, அவரை மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, போலீசார் கூறினர். தப்பியோடிய அதிலை போலீசார் தேடி வருகின்றனர்.ரூ. 7 கோடி ஹெராயினுடன்
சப்ளை செய்ய வந்தவர் கைது
புதுடில்லி:டில்லியில் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.டில்லியின் ரோஹினி என்ற இடத்தை சேர்ந்தவர் கவுரவ், 24. கடந்த 28 ம் தேதி, இவர் போதைப்பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:வன்சு என்பவரை திருமண வீட்டில் ஒன்றில் சந்தித்த கவுரவ், அவரிடம் நட்பாக பழகினார். அப்போது, போதை பொருள் கடத்தலில் நன்றாக சம்பாதிக்கலாம் என வன்சு கூறினார். அதையடுத்து, 2023 முதல், போதைப்பொருள் அடிமைகளுக்கு அவற்றை விற்று, சம்பாதித்து வந்த கவுரவ் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர்.அவரிடம் இருந்து, ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை, போதைப்பொருள் தடுப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.டென்னிஸ் வீராங்கனை
தந்தையால் கொலை
புதுடில்லி:மாநில அளவிலான டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ராதிகா யாதவ், தன் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.குருகிராமின் சுஷாந்த் லோக் பகுதியில் வசித்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா. இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவரின் தந்தை யாதவ். நேற்று இவர், தன் கைத்துப்பாக்கியால் ராதிகாவை சுட்டுக் கொன்றார்.எனினும், எதற்காக அந்த வீராங்கனை சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரிவிக்கப்பட வில்லை. துப்பாக்கியில் மொத்தம் இருந்த ஆறு தோட்டாக்களில், ஐந்து தோட்டாக்களை அவர் அந்த பெண் மீது பாய்ச்சி கொன்றார்.தகவல் அறிந்து சென்ற போலீசார், வீராங்கனை உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து, அவர் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்கின்றனர்.