கிரைம் செய்திகள்
துாங்க வைத்து நகை திருடிய நபரை தேடும் போலீஸ்
புதுடில்லி:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த இருவர், டில்லி ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த போது, ஒருவரின் உணவில் துாக்க மருந்து கலந்து துாங்க வைத்த விட்டு, 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையுடன் தப்பிய நபரை போலீசார் தேடுகின்றனர்.பிரதீப்குமார் என்பவரும், அவரின் நண்பர் பிரப் சிங் என்பவரும், டில்லி அருகே உள்ள பஹார்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 8ம் தேதி மதிய உணவில், துாக்க மாத்திரையை கலந்து, பிரதீப்குமாரை துாங்க வைத்து விட்டு, அவர் வைத்திருந்த 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளுடன் பிரப் சிங் ஒட்டம் பிடித்து விட்டார்.துாங்கி எழுந்த பிரதீப்குமார், நகைகளை காணாமல் திடுக்கிட்டார். டில்லி போலீசில் அவர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய பிரப் சிங்கை கைது செய்யவும், அவர் எடுத்துச் சென்ற நகைகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கல்லுாரியில் வேலை என கூறி
ரூ.80 ஆயிரம் மோசடி
குருகிராம்:ஹரியானா கல்லுாரி பேராசிரியர் என தன்னை அறிமுகம் செய்த நபர், வேலைக்காக காத்திருந்த இளைஞர் ஒருவரிடம், 80 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி தப்பினார். அவரை போலீசார் பிடித்துள்ளனர்.பெயர் குறிப்பிடப்படாத அந்த இளைஞரை அணுகிய நபர் ஒருவர், ஹரியானா பல்கலைக்கழக கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுவதாக அறிமுகம் செய்து கொண்டார். அவரின் நடை, உடை, பாவனைகளை பார்த்து, பேராசிரியர் தான் என நம்பிய அந்த இளைஞர், வேலை வேண்டும் என்றார்.அவரிடம், மாதம், 80 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறிய அந்த நபர், அதற்காக, 80 ஆயிரம் ரூபாய் செலவாகும் என கூறினார். உடனே, அவர் கூறிய வங்கிக்கணக்கிற்கு, 80 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்து, வேலைக்காக காத்திருந்தார் அந்த இளைஞர்.அதன் பிறகு, அந்த நபரிடம் இருந்து அழைப்புகள் வராததால், விசாரித்த இளைஞர், அந்த நபர் மீது மனேசார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அந்த 'பேராசிரியரை' கைது செய்தனர்.
வளர்ப்பு தாயை கொலை
செய்த இளைஞர் சிக்கினார்
முசாபர்நகர்:சொத்து பிரச்னையில் வளர்ப்பு தாயை, மண்வெட்டியால் அடித்து கொன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.உ.பி.,யின் முசாபர்நகரில் ரசியா, 50, என்ற பெண், ஆலம் என்ற நபரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். சொத்துகளை பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, கடந்த சில நாட்களாக ரசியாவுக்கும், ஆலத்திற்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், மண்வெட்டியால் அந்த பெண்ணை ஆலம் அடித்து கொன்றார். தகவல் அறிந்து நேற்று நயாகான் என்ற இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னையால் ரசியாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், கொலைக்கு அவர் பயன்படுத்திய மண்வெட்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.