உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

சாராயத்துடன் சென்ற கார் பெண் மீது மோதி விபத்து

புதுடில்லி:டில்லியில், சட்ட விரோதமாக மது பானங்களை ஏற்றி, வேகமாக சென்ற கார், சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியது. இதில் ஏற்பட்ட களேபரத்தில், அந்த காரை விட்டு தப்பிய இருவரில், டிரைவரை போலீசார் பிடித்துள்ளனர். டில்லியின் காஞ்சவாலா என்ற பகுதியில் உள்ள முபாரக் ரோட்டில், நேற்று முன்தினம் காலையில், தன் மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார் இந்து சர்மா, 38, என்ற பெண். அப்போது, சாலையில் வேகமாக சென்ற கார், அந்த பெண் மீது மோதியது. இதில், காலில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள், அந்த காரை முற்றுகையிட்ட போது, காரில் இருந்த இருவர் தப்பியோடினர். அந்த காரை மக்கள் சோதனையிட்ட போது, அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து, கார் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்தனர். முண்ட்கா என்ற இடத்திலிருந்து நஜப்கார் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியது. இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராஜு என்ற அந்த காரின் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரிக்கின்றனர்.

நள்ளிரவு பார்ட்டியில் இளம்பெண் கும்பலால் பாலியல் பலாத்காரம்

புதுடில்லி:டில்லியில் நள்ளிரவு பார்ட்டில் பங்கேற்ற இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப் பட்டார். முன்னதாக, அவருக்கு அளித்த மதுவில் துாக்க மருந்து கலந்திருந்தது. டில்லியின் பஞ்சாபி பாக் என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், 24 வயது பெண், மற்றொரு பெண் நண்பரின் அழைப்பை ஏற்று, அந்த பெண்ணின் நண்பர் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த பார்ட்டில் பங்கேற்றார். அப்போது, அவருக்கு துாக்க மருந்து கலந்த மது பரிமாறப்பட்டது. அதை அருந்திய அவர், மயங்கியதும், அங்கிருந்த கும்பலால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், சுயநினைவு திரும்பியதும் அந்த பெண்ணை தாக்கிய சிலர், இந்த தகவலை வெளியே சொன்னால், கொன்று விடுவோம் என மிரட்டியதாக, அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் படி, போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

மருத்துவமனையில் கூரை திடீர் சரிவு

புதுடில்லி:டில்லி, அம்பேத்கார் நகர் மருத்துவமனையின், பெண்கள் பிரிவு கட்டடத்தின் மேற்கூரை திடீரென விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மகளிர் நோய் பிரிவின் முதல் மாடியில் இந்த விபத்து நடந்தது. திடீரென கூரை இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் பலர் பீதியடைந்தனர். இந்த விபத்து குறித்து, அம்பேத்கார் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

'திருஷ்யம் - 2' படத்தின் தயாரிப்பாளருக்கு முன்ஜாமின்

புதுடில்லி:மலையாள மொழியில் உருவாக்கப்பட்டு, பல மொழி மாற்றங்களை கண்டுள்ள திருஷ்யம் - 2 படத்தின் டப்பிங் மற்றும் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் நாடுகளில் வெளியிடும் உரிமைகளுக்காக, குமார் மங்கத் பதக் என்பவர் இணை தயாரிப்பாளராக உள்ள பாரத் மகாபிரசாத் சேவக் என்ற நிறுவனத்திற்கு, ரஜிந்தர் குமார் கோயல் என்பவர், 4.3 கோடி ரூபாயை பலமுறை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த உரிமைகளை வழங்காமல், குமார் மங்கத் பதக் இழுத்தடித்துள்ளார். இதனால், அவர் மீது கிரிமினல் வழக்குகள் பதவி செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குமார் மங்கத் பதக் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுரவ் பர்தாப் சிங் லாலர், பல நிபந்தனைகளை விதித்து, தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக்கிற்கு முன்ஜாமின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி