உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனப்படுகொலை என விமர்சிப்பதா? பிரியங்காவுக்கு இஸ்ரேல் கண்டனம்

இனப்படுகொலை என விமர்சிப்பதா? பிரியங்காவுக்கு இஸ்ரேல் கண்டனம்

புதுடில்லி : 'ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இனப்படுகொலை என விமர்சிப்பது தான் வெட்கக்கேடானது' என, காங்., - எம்.பி., பிரியங்காவுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா சமூக வலைதளத் தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: இஸ்ரேல் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து விட்டது. அவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அப்படியும் கொலைவெறி அடங்காமல் மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை கொல்ல துடிக்கிறது. இந்தக் கொலை குற்றங்களை கண்டும் காணாமல் மவுனமாக இருப்பதும் பெரும் குற்றம். இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்காமல், மத்திய அரசு மவுனம் காப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் கூறியிருந்தார். மேலும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில், 'அல் - ஜசீரா' பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது இந்த விமர்சனத்திற்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதர் ருவென் அசார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

எது வெட்கக்கேடானது. உங்களது வஞ்சகமான பேச்சு தான் வெட்கக்கேடானது. ஹமாஸ் பயங்கரவாதிகள் 25,000 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி, மனித இனத்தையே ஹமாஸ் பயங்கரவாதிகள் அழித்து வருகின்றனர். காசாவில் இருந்து வெளியேற நினைக்கும் மக்களை சுடுவது, உதவிக்காக காத்திருப்போர் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவது என படுபாதக செயலை கட்டவிழ்ப்பது ஹமாஸ் பயங்கரவாதிகள் தான். அதன் காரணமாகவே அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. காசாவில் உணவு பஞ்சத்தை போக்க, 20 லட்சம் டன்கள் உணவை இஸ்ரேல் வினியோகித்துள்ளது. ஆனால், அவற்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடுங்கி வைத்துக் கொண்டு மக்களை பட்டினியில் வாட வைத்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் காசாவில் 450 சதவீத அளவுக்கு மக்கள் தொகை பெருகி இருக்கிறது. இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை. உயிரிழப்புகள் தொடர்பான ஹமாஸின் தகவல்களை நம்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஆக 13, 2025 13:50

ஏறக்குறைய இரண்டு லட்சம் இலங்கை தமிழர்களை இனஅழிப்பு செய்ய துணைப்போன ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் சொல்வதுதான் அக்கிரமம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை