உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைபர் கிரைம் மோசடியில் ரூ.1,000 கோடி இழப்பு

சைபர் கிரைம் மோசடியில் ரூ.1,000 கோடி இழப்பு

புதுடில்லி: “சைபர் கிரைம் மோசடிகளால் டில்லிவாசிகளில் இந்த ஆண்டு இதுவரை, 1,000 கோடி ரூபாய் இழந்துள்ளனர்,” என, டில்லி மாநகரப் போலீசின் புலனாய்வுப் பிரிவு துணைக் கமிஷனர் வினித் குமார் கூறினார். இதுகுறித்து, நிருபர்களிடம் வினித் குமார் கூறியதாவது: கடந்த 2024ம் ஆண்டில், தலைநகர் டில்லியில் சைபர் கிரைம் மோசடிகளில் டில்லி மக்கள் 1,100 கோடி ரூபாயை இழந்தனர். அதில், 10 சதவீதம் தொகை, வங்கிக் கணக்குகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1,000 கோடி ரூபாய் வரை சைபர் கிரைம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில், 20 சதவீத தொகை வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு இழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றம் குறித்து உடனடியாக 1930 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். புகார் கொடுத்தவுடன் மோசடி செய்யப்பட்ட நிதியை முடக்க போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப் படுகிறது. வழக்கு முடிந்து அதை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டவுடன், அந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது ஆகியவைதான் அதிகமாக நடக்கிறது. முதலீட்டு மோசடி செய்பவர்கள், பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தங்களை பெண்ணாக காட்டிக் கொள்கின்றனர். அதிக லாபம் என ஆசை காட்டி, முதலில் சிறிய அளவில் முதலீடு செய்ய வைக்கின்றனர். அதற்கு இரண்டு மடங்கு லாபத்தையும் அனுப்புகிறனர். அதைத் தொடர்ந்து லட்சம், கோடி என முதலீடு உயரும் போது அவற்றை மோசடி செய்து விடுகின்றனர். இந்த மோசடி கும்பல் பெரும்பாலும் கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து செயல்படு கின்றனர். டிஜிட்டல் கைது மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டு மிரட்டி பணம் பறிக்கின்றனர். பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிக லாபம் என நம்பி முதலீடு செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை