கரையை கடக்குது டானா புயல்; 10 லட்சம் பேர் இடமாற்றம்
புதுடில்லி: ஒடிசாவில் நாளை அதிகாலை 'டானா' புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல், வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாகவும், தற்போது அது ஒடிசாவின் தென்கிழக்கே 490 கி.மீ., தொலைவில் நிலைகொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலானது, ஒடிசாவின் பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் எனவும், அப்போது கனமழையுடன், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் கேந்திராபாரா, பாத்ராக், பாலசோர் உட்பட 14 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு அப்புறப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறுகையில், “டானா புயலால் பாதிக்கப்படும் மக்களுக்காக 5,000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14 மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.இதேபோல் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் டானா புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசும் மேற்கொண்டுள்ளது. மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.