தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 36 மணிநேரத்தில் உருவாகும் தாழ்வு மண்டலம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. ஆனால் தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.இந்த தாழ்வுப் பகுதியானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 36 மணி நேரத்தில் தெற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. பின்னர், இந்த புயல் சின்னம் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. ராமநாதபுரம், நாகை,புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக்.21) கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.