உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ அமைச்சகத்தின் 200 மனுக்கள் தள்ளுபடி: ஓய்வூதியம் விவகாரத்தில் டில்லி கோர்ட் அதிரடி

ராணுவ அமைச்சகத்தின் 200 மனுக்கள் தள்ளுபடி: ஓய்வூதியம் விவகாரத்தில் டில்லி கோர்ட் அதிரடி

புதுடில்லி: ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ராணுவ அமைச்சகம் தாக்கல் செய்த, 200க்கும் மேற்பட்ட மனுக்களை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முப்படைகளில் பணியாற்றும் வீரர்களில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி, படை வீரர்கள் தீர்ப்பாயத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உத்தரவு

இவற்றை விசாரித்த தீர்ப்பாயம், அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்கலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ராணுவ அமைச்சகம் சார்பில், 200க்கும் மேற்பட்ட மனுக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அதன் முடிவில், அவர்கள் அளித்த உத்தரவு:ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை வாழ்க்கை முறை நோய் என்று வாதிடுவதால் மட்டுமே வீரர்களுக்கான மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தை மறுக்க முடியாது.ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்குவது என்பது தாராள மனப்பான்மை அல்ல; மாறாக, ராணுவ பணியின்போது, அவர்கள் அனுபவித்த குறைபாடுகள், செய்த தியாகங்களை உரிமையுடனும், நியாயமாகவும் அங்கீகரிப்பதாகும்.

வருத்தம்

பணியின் போது காயம் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் அந்த வீரர் ஆதரவின்றி விடப்படாமல், பொருளாதார பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ முடியும் என்பதை ஓய்வூதியம் உறுதி செய்கிறது. தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் தேசத்திற்கு சேவை செய்த வீரர்களுக்கு அரசின் பொறுப்பை இதுவே உறுதி செய்கிறது. பணியின் போது போரில் ஈடுபடாமல் இருந்த காலத்தில் வீரர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்பட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற காரணத்துக்காக, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது. ஒரு காலத்தில் களத்தில் பணியாற்றியவர்கள், பின்னர் அமைதிப் பணி காலத்தில் பணியாற்றும் போது, அவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் இருப்பது கண்டறியப்படுகிறது. இந்த சூழலில், அவர்களுக்கான சலுகையை மறுப்பது, அந்த வீரர்களின் சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் ராணுவ அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 06, 2025 07:35

எங்க நாட்டுல எம் எல் ஏ க்கள் , எம்பிக்கள் எல்லாருமே எப்போதும் சும்மா இருக்கறதால இரத்த அழுத்தம் சர்க்கரை நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்களையும் மாட்டு திறனாளிகளா ஏத்துக்கிட்டு கூடுதல் பென்ஷனுக்கு உத்தரவு கொடுக்கணும் யுவர் ஆனர் இm


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை