நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய டில்லி அரசு தயார் முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு
புதுடில்லி:“டில்லி மக்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுதும் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கும் மருத்துவ சேவை செய்ய டில்லி அரசு தயாராகவே உள்ளது,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, டில்லி கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். நாட்டில் எந்த ஒரு மனிதனும் மருத்துவ சேவை கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது. அது, அரசின் கடமை.நாட்டின் தலைநகரான டில்லியில் வசிப்போருக்கு மட்டும் மருத்துவச் சிகிச்சை அளிப்போம் என டில்லி அரசு தன்னை குறுக்கிக் கொள்ளாது. நாடு முழுதும் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக டில்லிக்கு வருவோருக்கும் மருத்துவ சேவை செய்ய டில்லி அரசு தயாராகவே இருக்கிறது.மருத்துவத் துறையை மேம்படுத்த கூட்டு முயற்சிகள் அவசியம். மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' திட்டம் டில்லியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.முதியோர் குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்டோரின் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நம் கடமை.அதேபோல, உடல் உறுப்பு தானம் குறித்தும் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இறந்த பிறகும் நம் உடல் உறுப்புகள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே, உடல் உறுப்புகளை தானம் செய்ய நான் உறுதியளித்துள்ளேன். இதனால் என்னை பாக்கியசாலியாக உணருகிறேன். இதுபோன்ற உன்னதமான காரியங்களுக்கு மக்களும் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துணைநிலை கவர்னர் சக்சேனா பேசியதாவது:முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டில்லி அரசில் சுகாதாரத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சியிலும் டில்லி முன்னணி வகிக்க வேண்டும். டில்லியில் ஆட்சி செய்த முந்தைய அரசுகளின் கொள்கை குறைபாடுகள் காரணமாக, தலைநகரான டில்லி மருத்துவத் துறையில் மிகவும் பின் தங்கியிருந்தது. ஆனால், இப்போது பொறுப்பேற்றுள்ள பா.ஜ., அரசு மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக கடினமாக உழைக்கிறது. உணவுதான் மருந்து. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மூன்றாம் கட்ட மருத்துவமனை வரை தடையற்ற ஒருங்கிணைப்பும் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
விடுதலை அடைந்தேன்: அமித்ஷா
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த கல்லீரல் மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து தேவையான அளவு தூக்கம், உணவு, தண்ணீர் குடித்தல் மற்றும் நாள் தவறாமல் உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன்.இதனால் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைத்து அலோபதி மருந்துகளிலும் இருந்து விடுதலை அடைந்து விட்டேன். என் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிந்தனை மற்றும் முடிவு எடுக்கும் திறனில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.இளைஞர்கள் தினமும் இரண்டு மணிநேர உடற்பயிற்சி மற்றும் ஆறு மணி நேர தூக்கம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.