உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ரவுடி மீரட்டில் என்கவுன்ட்டர் 2 துப்பாக்கி, குண்டுகள் கைப்பற்றல்

டில்லி ரவுடி மீரட்டில் என்கவுன்ட்டர் 2 துப்பாக்கி, குண்டுகள் கைப்பற்றல்

மீரட்:உத்தர பிரதேசம் மற்றும் டில்லி போலீசால் பல வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளி உ.பி., மாநிலம் மீரட்டில் நேற்று அதிகாலை, 'என்கவுன்ட்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார்.பக்பத் நகரைச் சேர்ந்த தாதா ஹஷிம் பாபா கும்பலைச் சேர்ந்தவர் அனில் என்ற சோனு மட்கா,39. கடந்த அக்.31ம் தேதி தீபாவளி நாளில், டில்லி பார்ஷ் பஜாரில் ஆகாஷ் சர்மா மற்றும் அவரது மருமகன் ரிஷப் ஆகியோர் தங்கள் வீட்டு முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் துப்பாக்கியால் ஆகாஷ் மற்றும் ரிஷப் ஆகிய இருவரையும் சுட்டுக் கொலை செய்தனர். அதில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அனில் என்ற சோனு மட்காதான் இருவரையும் கொலை செய்தது தெரிய வந்தது. இதுமட்டுமின்றி, உத்தர பிரதேசத்திலும் பல குற்ற வழக்குகளில் அனிலுக்கு தொடர்பு இருந்தது. இரு மாநில போலீசாரும் அனிலை தேடி வந்த நிலையில், அனில் குறித்து தகவல் தருவோருக்கு 50,000 ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், டில்லி மாநகரப் போலீஸ் மற்றும் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை ஆகியவை இணைந்து அதிரடி சோதனை நடத்தியது.உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் டி.பி., நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் அனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீஸ் மற்றும் அதிரடிப் படையினர் அந்தப் பகுதியை நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த வழியாக அனில் என்ற சோனு மட்கா, பைக்கில் சென்றார். வண்டியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடியே வண்டியை செலுத்தினார்.போலீசாரும் பதிலடி கொடுத்தனர். அனில் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாயந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே, அனில் உயிரிழந்தார்.அனில் என்ற சோனு மட்கா பதுங்கி இருந்த இடத்தில் இருந்து, இரண்டு அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 10 துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.கடந்த அக். 7ல் புதுடில்லி கரோல்பாக்கில் உள்ள அலுவலகத்தில் 1.5 கோடி ரூபாயை அனில் கொள்ளையடித்தார். இதையடுத்தே, அனில் குறித்து தகவல் தருவோருக்கு 50,000 ரூபாய் பரிசை டில்லி மாநகரப் போலீஸ் அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை