டில்லி உஷ் -
மறுவரையறை கமிஷன் தலைவர் தயார்! தொகுதி மறுவரையறை மசோதா பார்லி.,யில் நாளை தாக்கலாகிறது. இது, அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா என்பதால், இதை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை. அதாவது, 360 லோக்சபா எம்.பி.,க்கள். ஆனால், ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தற்போது, 320 லோக்சபா எம்.பி.,க்களே உள்ளனர். அப்படியிருக்க இந்த மசோதா நிறைவேறுமா? லோக்சபாவில் நிறைவேறினாலும், ராஜ்யசபாவிலும் தேர்வாக வேண்டும். ராஜ்யசபாவில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு பா.ஜ., கூட்டணிக்கு இன்னும், 10 எம்.பி.,க்கள் தேவை. இதை பா.ஜ., சமாளித்துவிடும் என, சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரலில் இதே மசோதா பெரும்பான்மை இல்லாததால் தோல்வி அடைந்தது. இந்த முறை, தி.மு.க., – சரத் பவாரின் தேசியவாத காங்., ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படும் என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. லோக்சபாவில் நாளை மாலை பிரதமர் மோடி உரையற்றுவார் என, சொல்லப்படுகிறது. சுதந்திரம் பெற்றவுடன், நள்ளிரவில், காங்கிரசைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பார்லி.,யில் ஆற்றிய உரையை மிஞ்சும் அளவில் மோடி பேசப் போகிறார் என்கின்றனர். இதற்காக சட்ட நிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என, பலரிடமும் கருத்து கேட்டு உரையை தயார் செய்துள்ளாராம் பிரதமர். இன்னொரு பக்கம், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், இதை நிறைவேற்ற ஒரு கமிஷன் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, இந்த கமிஷனின் தலைவராக நியமிக்கப்படுவார். முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த கமிஷனின் தலைவராக நியமிக்கப்படுவார் என, பேச்சு அடிபடுகிறது. கரப்பான் கட்சி கரைந்து விட்டதா? டில்லியில், கடந்த ஜூனில் பெரும் போராட்டத்தை நடத்தி, பல அரசியல் கட்சிகளை அதிர வைத்தது, கரப்பான் பூச்சி கட்சி. இந்த போராட்டத்தால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய நேரிட்டது. இப்படிப்பட்ட கட்சியின் நிலை, தற்போது பரிதாபமாக உள்ளது. இந்த கட்சியின் அமைப்புச் செயலராக இருப்பவர் சவுரவ் தாஸ். இவர் தான் தற்போது பிரச்னையில் சிக்கி உள்ளார். இவர் பிறந்தது டில்லி என தெரிவித்திருந்தாலும், பாஸ்போர்ட்டில் புதுச்சேரி என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை தற்போது டில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தவிர, சென்னைக்கும் தாசுக்கும் தொடர்பு உள்ளது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகம், அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எப்படி, யாரால் இந்த பாஸ்போர்ட் கிடைத்தது என, வெளியுறவுத் துறையும், டில்லி காவல் துறையும் விசாரிக்கின்றன. மேலும், அவரது பாஸ்போர்ட்டில் அப்பா பெயரும் இல்லை. இவர் இந்தியரே அல்ல; நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்னை வர காரணம், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. தாஸ், ஏற்கனவே கெஜ்ரிவால் கட்சியில் இருந்தவர். அங்கிருந்த ஒருவர் தான் தாஸை பற்றி போட்டுக் கொடுத்துவிட்டார் என, பேசப்படுகிறது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என, மறைந்த நடிகர் விவேக் கூறியது போல, எப்படியிருந்த கரப்பான் கட்சி இப்படி ஆகிவிட்டதே. ரகசிய அறிக்கை! திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம், தமிழக முதல்வர் விஜய் அரசுக்கு நெருக்கடியை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், தலைமை செயலர் சாய் குமார் உட்பட பல அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய உளவுத்துறை ஒரு ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் சமர்ப்பித்துள்ளதாம். அதில், திருப்பரங்குன்றம் தீபத்துாண் குறித்து பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். ‘இனி மேல் தீபத்துாணுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போல, இங்கும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, எந்த நேரமும் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, சொல்லப்பட்டுள்ளதாம். இதைத் தான், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறைமுகமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் போது தெரிவித்தார். அதாவது, ‘மத்திய பாதுகாப்பு படை தான் பாதுகாப்பு தர வேண்டும்’ என, அவர் வலியுறுத்தியதன்படி, உச்ச நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்று உத்தரவிட்டுள்ளது. ‘இனி, திருப்பரங்குன்றம் மலைக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு தர முடியாது; மத்திய படை தான் என்கின்றனர்’ மத்திய அரசு வழக்கறிஞர்கள். இனி, இந்த தீபத்துாண் தான், பா.ஜ.,வின் தமிழக பிரசாரமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு? ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் என்கிற செய்தி, டில்லி வட்டாரங்களில் அடிபடுவது வழக்கமாகிவிட்டது. இப்போதும் இந்த பேச்சு தான். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறிய பின், அடுத்த ஒரு வாரத்திலேயே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாம். இந்த முறை மகளிருக்கு அதிக இட ஒதுக்கீடு உண்டு எனவும் சொல்லப்படுகிறது. அதாவது, 10 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டால், அதில் ஆறு பேர் மகளிர் என, பிரதமர் மோடி முடிவெடுத்து விட்டாராம். தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாம். இதற்கு கைமாறாக, லோக்சபாவில் சரத் பவார் கட்சியின் எட்டு எம்.பி.,க்கள் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும். இதற்கு, சரத் பவார் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. தவிர, திரிணமுல் காங்கிரசின், 20 அதிருப்தி எம்.பி.,க்களும், பா.ஜ.,விற்கு ஆதரவாக ஓட்டளிப்பர். இதில் எட்டு பேர் பெண்கள். இவர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் உண்டு என, பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் மகளிருக்கு அதிக அமைச்சர் பதவிகள், இன்னொரு பக்கம் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு என, இரண்டு பக்கமும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது பா.ஜ., இந்த முறை மசோதா ஒருமனதாக நிறைவேறும் என, அக்கட்சியினர் உறுதியாக சொல்கின்றனர். கருத்துக்கள் சொல்ல: dinamalar.in