சட்டவிரோத வங்கதேசி குடியேற்றம் டில்லி முழுதும் அதிரடி சோதனை
புதுடில்லி:சட்டவிரோதமாக டில்லியில் குடியேறிய வங்கதேசத்தினருக்கு எதிரான சோதனை நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 20க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை, ஹஸ்ரத் நிஜாமுதீனின் மதகுருக்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று, சனிக்கிழமை சந்தித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகங்கள் நடத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்ததுடன், நகருக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அந்த குழு வலியுறுத்தியது.வீடுகளை வாடகைக்கு எடுக்கவோ அல்லது வேலைவாய்ப்பைப் பெறவோ சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், மோசடியாகப் பெற்ற ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட அரசாங்க ஆவணங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த துாதுக்குழு வலியுறுத்தியது.இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து வந்து, தேசிய தலைநகரில் சட்டவிரோத குடியேறியவர்களைக் கண்டறிய இரண்டு மாத சிறப்பு இயக்கத்தைத் தொடங்குமாறு டில்லி தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு துணைநிலை கவர்னர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாரந்தோறும் அறிக்கைகளை சமர்ப்பிக்க தலைமைச் செயலருக்கு துணை நிலை கவர்னர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தேசிய தலைநகர் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர், பல்வேறு குடிசைப் பகுதிகள், கலிந்தி குஞ்ச், ஷாஹீன் பாக், ஜாமியா நகர் ஆகிய இடங்களுக்குச் சென்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகளைச் சரிபார்த்து வருகின்றனர்.இரண்டாவது நாளான நேற்று 20க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை போலீசார் அடையாளம் கண்டனர். அவர்கள் கிழக்கு டில்லியின் சீமாபுரி பகுதியில் வசித்து வருகின்றனர்.சந்தேகப்படும் நபர்களிடம் இருந்து பெறப்படும் ஆவணங்கள், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.