உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைப்பு தொகை வரி உயர்வு; வங்கி மேலாளருக்கு உதை

வைப்பு தொகை வரி உயர்வு; வங்கி மேலாளருக்கு உதை

ஆமதாபாத் : நிரந்தர வைப்புத்தொகை மீதான வரி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், வங்கி மேலாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள வஸ்த்ராபூர் என்ற பகுதியில், பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், ஜெய்மன் ராவல் என்ற வாடிக்கையாளர், நிரந்தர வைப்புத்தொகை கணக்கை பராமரித்து வருகிறார். சமீபத்தில், நிரந்தர வைப்புத்தொகை மீதான வரி விகிதம் அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்மன் ராவல், இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. வங்கி மேலாளரின் சட்டை காலரை பிடித்து தாக்கிய ஜெய்மன் ராவல், அவரது தலையில் ஓங்கி அடித்தார். இருவருக்கும் இடையேயான சண்டையை, வங்கி ஊழியர்களும், ஜெய்மன் ராவலின் தாயும் விலக்கினர். எனினும், இருவரும் சண்டையிட்டனர். சிறிது நேரத்துக்கு பின், சண்டை நிறுத்தப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, வஸ்த்ராபூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் அருகே, பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் கிளை செயல்படுகிறது. இங்கு பெண் மேலாளரிடம், 'சிபில்' மதிப்பெண் தொடர்பாக, வாடிக்கையாளர் தகராறில் ஈடுபட்டார். இது குறித்தும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ