விவசாயிகளுக்கு பால் ஊக்கத்தொகை: துணை முதல்வர் சிவகுமார் உறுதி
ராம்நகர்; ''சென்னப்பட்டணா விவசாயிகளுக்கு பால் ஊக்கத்தொகையை உயர்த்துவது குறித்து, சரியான நேரத்தில் முடிவு எடுப்போம்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.ராம்நகரின் சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வருக்கு பாராட்டு விழா, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னப்பட்டணாவில் நேற்று நடந்தது. இதில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:கடந்த ஆண்டே உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரால் நேரம் கிடைக்கவில்லை. இந்த கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு உங்களுக்கு நன்றி தெரிவிக்க ஆர்வமாக இருந்தார். ஆனால் மூட்டு வலியால் அவரால் வர முடியவில்லை. யோகேஸ்வர் வெற்றிக்காக இரவும், பகலும் உழைத்த அமைச்சர்கள், தொண்டர்கள், கட்சியின் தலைவர்களை நான் வாழ்த்துகிறேன். வளர்ச்சிக்காக நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளீர்கள். நான் கடந்த 1989 முதல் இந்த மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி வருகிறேன். முதல்முறையாக ராம்நகரில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. கண்ணீர் வடிப்பு
அடுத்த மூன்று ஆண்டுகளில் ராம்நகர் மாவட்டத்தின் பிம்பத்தை முழுமையாக மாற்றி காட்டுவோம். யாரையும் விமர்சிக்கும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என்னையும், சுரேஷையும் அபூர்வ சகோதரர்கள் என்று தேவகவுடா, குமாரசாமி, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு உங்கள் ஓட்டுகள் மூலம் பதில் கொடுத்து உள்ளீர்கள். சென்னப்பட்டணா வெற்றியின் மூலம், வளர்ச்சி பணி செய்யும் அரசுக்கு ஆதரவாக மக்கள் இருப்பது தெளிவாகி உள்ளது. குமாரசாமி ராஜினாமாவால் தொகுதியான காலியான பின், வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து குறை கேட்டேன். என்னிடம் 25,000க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வந்தன. வீடு, நிலம் இல்லை என்று கூறி பலர் விண்ணப்பித்தனர். உங்களுக்கு அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தேன். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். யோகேஸ்வர் மட்டும் இங்கு எம்.எல்.ஏ., இல்லை; நானும் தான்.யோகேஸ்வர் இதற்கு முன்பு எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, நிறைய வளர்ச்சி பணிகள் செய்து உள்ளார். கோவில்கள் கட்டி கொடுத்து உள்ளார். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று குமாரசாமியிடம் கேட்டேன். எனது கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது ம.ஜ.த., தலைவர்கள் கண்ணீர் வடித்து உணர்ச்சிரீதியாக மக்களை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் நீங்கள் அவர்கள் நடிப்பில் ஏமாறவில்லை. கட்சி முக்கியம்
மாநிலத்தில் அதிக பால் உற்பத்தி செய்யும் தாலுகா சென்னப்பட்டணா தான். விவசாயிகளுக்கு பால் ஊக்கத்தொகையை உயர்த்துவது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுப்போம். சென்னப்பட்டணாவில் 5,000 வீடுகள் கட்டி தரப்படும் என்று, வீட்டுவசதி அமைச்சர் ஜமீர் அகமதுகான் கூறி உள்ளார். பயனாளிகளுக்கு வீடுகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க விடமாட்டோம். சண்டூரை தவிர மற்ற இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தோற்கும் என்று கருத்து கணிப்புகள் கூறின. மூன்று தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதன்படி நடந்து உள்ளது. சென்னப்பட்டணாவில் போட்டியிட எனக்கு ஆசை இருந்தது. ஆனால், கட்சி அதற்கு உடன்படவில்லை. சுரேஷுக்கும் போட்டியிட அழுத்தம் இருந்தது. ஆனால், குடும்பத்தை விட கட்சியை முக்கியம் என்று முடிவு செய்தோம். யோகேஸ்வர் நமது கட்சிக்கு வர ஒப்புகொண்டதும், தொண்டர்களுடன் பேசி அவரை சேர்த்து கொண்டோம். ராம்நகர் மாவட்டத்தில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், அக்கட்சி தொண்டர்கள் வருத்தப்பட வேண்டாம். உங்கள் எதிர்காலத்திற்காக எங்கள் பக்கம் வாருங்கள். நாங்கள் உங்களை பாதுகாப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.