உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்துக்கு அனுமதி கேட்கிறார் தேவகவுடா

மேகதாது திட்டத்துக்கு அனுமதி கேட்கிறார் தேவகவுடா

பெங்களூரு: “மேகதாது திட்டத்துக்கு உடனடியாக அனுமதியை பெற்றுத் தரும்படி, என்னை சந்தித்த மத்திய பார்லிமென்ட் நீர்வள கமிட்டியிடம் வலியுறுத்தினேன்,” என, முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற பகுதியில் காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு, கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முழு திட்ட அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது.அணை கட்டும் பட்சத்தில், காவிரி கரையோரத்தில் உள்ள தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

கே.ஆர்.எஸ்., அணை ஆய்வு

இதற்கிடையில், மத்திய பார்லிமென்ட் நீர்வள கமிட்டி உறுப்பினர்கள், மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணையை நேற்று முன்தினம் திடீரென ஆய்வு செய்தனர். பின், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டு காவிரி நீர் வாரிய குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பம் அளித்து வருகிறது. தண்ணீர் இல்லாவிட்டாலும் தண்ணீர் கேட்கின்றனர். காவிரி ஆணையம் இதுவரை நம் மாநிலத்திற்கு வந்து எந்த அளவுக்கு தண்ணீர் உள்ளது என்று ஆய்வு செய்யவில்லை.

போராட வேண்டும்

நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை பிரதமர் நரேந்திர மோடிக்கு உணர்த்த நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். இதில் அரசியல் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.இன்னும் இரண்டரை ஆண்டுகள் ராஜ்யசபாவில் இருப்பேன். காவிரிக்காக நான் சாகும் வரை போராடுவேன். மாநில மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை.காவிரி பிரச்னையை பார்லிமென்டில் எழுப்புவேன். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். தமிழக அரசுக்கு பலம் இருப்பதால், போராடுகின்றனர். நமக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது.பெங்களூரு மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். எனவே, மேகதாது திட்டத்துக்கு உடனடியாக அனுமதியை பெற்று தரும்படி, என்னை சந்தித்த மத்திய பார்லிமென்ட் நீர்வள கமிட்டியிடம் வலியுறுத்தினேன்.

64 டி.எம்.சி., தண்ணீர்

பெங்களூரு நகரின் மக்கள்தொகை தற்போது 1.35 கோடியாக உள்ளது, 2044ல் இந்த எண்ணிக்கை 3 கோடியை தாண்டும். இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு 64 டி.எம்.சி., தண்ணீர் தேவை.தமிழகத்திற்கு மிகப்பெரிய அரசியல் அதிகாரம் உள்ளது. அவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் போதாது. தமிழகம் முழுவதும் மேலணை பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெருமழை பெய்தாலும் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றனர்.தமிழக பாசனம் குறித்து வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் அறிக்கை அளித்திருந்தார். அதில், தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று பயிர்களை விளைவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், கர்நாடகாவில் ஒரு பயிரை கூட விளைவிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

மீண்டும் பிரதமர்

தமிழகத்தில் குறுவை, சம்பா, தாளடி விவசாயம் என மொத்தம் 24.71 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்படுகிறது. இதேபோல் கர்நாடகாவில் அனைத்து வகை பயிர்களையும் சேர்த்தாலும் 18.85 லட்சம் ஏக்கரை தாண்டாது.கர்நாடகா எதிர்கொண்டுள்ள காவிரி நதிநீர் பிரச்னையை தீர்க்கும் சக்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது. தேர்தலுக்கு பின் மீண்டும் பிரதமராக வரும் அவர், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ