உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தார்வாட் டூ காஷ்மீர் தனியாக பைக்கில் சென்று கல்லுாரி மாணவி கெத்து

தார்வாட் டூ காஷ்மீர் தனியாக பைக்கில் சென்று கல்லுாரி மாணவி கெத்து

இன்றைய இளம் தலைமுறையினருக்கு 'லாங் டிரைவ்' எனப்படும் நீண்ட துார பயணத்தில், அதிக ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. நண்பர்கள் பட்டாளத்துடன் சேர்ந்தோ, தனியாகவோ பைக்கை எடுத்துக் கொண்டு, 'லாங் டிரைவ்' பறந்து விடுகின்றனர். அதுவும் 100, 200 கிலோ மீட்டர் துாரம் இல்லை.ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் துாரம். வண்ணத்து பூச்சி போல பறந்து, இந்த உலகை சுற்றி பார்க்க ஆசை. இதற்காக எவ்வளவு தடைகள் வந்தாலும், கடந்து சென்று விடுகின்றனர். 'லால் டிரைவ்' செல்வதில் என்ன இருக்கிறது என்று, அதை செல்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வதை கேட்கும்போது, நாமும் சென்றுவிடலாம் என்ற மனநிலை வந்துவிடும். 18 வயது கல்லுாரி மாணவி, காஷ்மீருக்கு பைக்கில் 'லாங் டிரைவ்' சென்று அசத்தி உள்ளார்.கர்நாடகாவின் வடமாவட்டமான தார்வாட் வித்யாநகரில் வசிப்பவர் ஹரவிஷெட்டர். இவரது மகள்கள் கோமல், 22, பிரதிக் ஷா, 18. சகோதரிகள் இருவருக்கும் சிறிய வயதில் இருந்தே, பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம்.லால் டிரைவ் செல்வதில் ஆர்வமாக இருந்த, கோமல் தனது 19 வது வயதில், தார்வாடில் இருந்து காஷ்மீருக்கு தனியாக, பைக்கில் சென்று இருந்தார். தற்போது 18 வயதே ஆன பிரதிக் ஷாவும் தார்வாடில் இருந்து காஷ்மீருக்கு, பைக்கில் தனியாக சென்று உள்ளார்.கடந்த 13ம் தேதி தார்வாடில் இருந்து கிளம்பிய, பிரதிக் ஷா 21ம் தேதி, காஷ்மீரின் லால் சவுக்கை அடைந்துள்ளார். தற்போது அங்கு தங்கி உள்ள அவர், இன்னும் ஓரிரு நாளில், அங்கிருந்து திரும்பி வர உள்ளார்.இதுகுறித்து பிரதிக் ஷாவின் அக்கா கோமல் கூறியது:சிறுவயதில் இருந்தே அப்பாவுடன் பைக்கில் செல்ல, எனக்கும், பிரதிக் ஷாவுக்கும் பிடிக்கும். நானும், அவரும் 12 வயதில் இருந்து, பைக் ஓட்ட ஆரம்பித்தோம். முதலில் சாதாரண பைக்கை ஓட்டினோம்.பின்னர் ரைஸ் பைக்குகள் ஓட்ட ஆரம்பித்தோம். கேரளாவை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கேரளாவில் இருந்து காஷ்மீருக்கு தனியாக பைக்கில், பயணம் செய்தது பற்றி அறிந்தேன். இதனால் எனது 19 வது வயதில், நானும் தார்வாடில் இருந்து காஷ்மீர் சென்றேன்.எனது சாதனையை முறியடிப்பதாக பிரதிக் ஷா கூறினார். அதன்படி 18 வயதில் தனியாக பயணம் செய்து, காஷ்மீர் சென்றுவிட்டார். தார்வார் - காஷ்மீர் லால் சவுக் இடையிலான துாரம் 2,638 கிலோ மீட்டர் ஆகும். ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ மீட்டர் துாரம், பிரதிக் ஷா பைக் ஓட்டி உள்ளார். இரவில் பாதுகாப்பான இடத்தில் தங்கி உள்ளார்.அவர் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. என்னை போன்று தங்கையும், காஷ்மீருக்கு தனியாக பைக் பயணம் செய்தது மகிழ்ச்சி.வரும் நாட்களில் வேறு பகுதிக்கு செல்லவும், அவர் திட்டமிட்டு உள்ளார். தற்போது பிரதிக் ஷா பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார். படிப்பிலும், பைக் ஓட்டுவதிலும் கவனம்செலுத்துகிறார்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை