உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய கீதத்தை அவமதித்தாரா நிதிஷ்? பீஹார் சட்டசபையில் கடும் அமளி

தேசிய கீதத்தை அவமதித்தாரா நிதிஷ்? பீஹார் சட்டசபையில் கடும் அமளி

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இடையே நேற்று அம்மாநில சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பாட்னாவில் நேற்று முன்தினம் 'செபாக் தக்ராவ்' எனப்படும் கிக் வாலிபால் உலகக் கோப்பை போட்டி துவக்க விழா நடந்தது.

ஒத்திவைப்பு

முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த போது முதல்வர் நிதிஷ் குமார், தன் அருகில் இருந்த பீஹார் அரசின் முதன்மைச் செயலர் தீபக் குமாரின் தோளை தட்டி சிரித்துப் பேசினார். தேசிய கீதம் முடிவடையும் முன்பே, மேடையை விட்டு இறங்கிச் சென்றார். இதை பார்த்த கட்சியினர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், நேற்று பீஹார் சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் பதாகைகளுடன் சபையின் மையப் பகுதிக்கு வந்து, நிதிஷ் குமார், 'நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என, முழக்கமிட்டனர். சிலர் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றனர்.சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ், பூஜ்ய நேரத்தில் இந்த பிரச்னையை எழுப்பலாம் என்று பலமுறை கூறிய போதும், அமளி தொடர்ந்தது. இதனால் சபை பிற்பகல் 2:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபை ஒத்திவைக்கப்பட்ட பின், வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''முதல்வரால் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது ஒரு தீவிரமான விஷயம். நாட்டு மக்களை அவர் அவமதித்துள்ளார். நிதிஷ் குமார் மாநிலத்தை ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்பதை இது காட்டுகிறது.

ராஜினாமா

''அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் மோடி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் ஏன் இது குறித்து அமைதியாக உள்ளனர்?'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையே தேசிய கீதத்தை அவமதித்தற்காக முதல்வர் நிதிஷ் மீது வழக்கு பதிய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என, பீஹாரின் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை