உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்கண்டில் மீண்டும் ஜே.எம்.எம்., காங்.,கூட்டணி வெற்றி

ஜார்கண்டில் மீண்டும் ஜே.எம்.எம்., காங்.,கூட்டணி வெற்றி

ராஞ்சி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்கு பின் வெளியான பெரும்பாலான கணிப்புகளில், பா.ஜ., வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளும் கூட்டணி அதை துாள் துாளாக்கி உள்ளது. பா.ஜ.,வை வீழ்த்தி அபார வெற்றி கண்டுள்ள ஹேமந்த் சோரன், -மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், இந்தாண்டு ஜனவரியில், நில அபகரிப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.இதனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார். ஆறு மாத சிறைவாசத்துக்கு பின், ஜூனில் ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இந்நிலையில், ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 13 மற்றும் 20ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது.தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய 'இண்டி' கூட்டணிக்கும், பா.ஜ.,வின் தே.ஜ., கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், ஜார்க்கண்ட் முழுதும் பிரசாரம் செய்தனர். 'ஜார்க்கண்டில் வங்கதேசத்தினர் ஊடுருவல், பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு' போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, பா.ஜ.,வினர் பிரசாரம் மேற்கொண்டனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா ஆகியோர், பா.ஜ.,வின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து, பழங்குடியின மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கினர்.காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், கூட்டணி அரசின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி, மொத்தமுள்ள 81 தொகுதிகளில், 56ல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், அக்கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கணிப்புகளில், பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கூட்டணி 24 இடங்களை மட்டுமே கைப்பற்றி, மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.அபார வெற்றி பெற்றுள்ள ேஹமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: ஜார்க்கண்டில் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே பரவலாக இருந்த நிலையில், அதை பயன்படுத்த பா.ஜ., தவறி விட்டது. பழங்குடியினரை குறிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஹேமந்த் சோரன், தான் ஒரு 'கிங் மேக்கர்' என்பதை நிரூபித்துள்ளார்.பா.ஜ.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாதது, அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வில் தேர்ச்சி!

ஜார்க்கண்டில் ஜனநாயக தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளோம். விரைவில் எங்களது வியூகத்தை இறுதி செய்வோம். எங்கள் கூட்டணியை அபார வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.- ஹேமந்த் சோரன் முதல்வர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை