அரசு அலுவலக பணிநேரத்தை மாற்ற பேரிடர் ஆணையம் ஆலோசனை
விக்ரம்நகர்:நகரின் மோசமான காற்று மாசுபாட்டைச் சமாளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்த பணிநீக்கம் செய்யப்பட்ட மார்ஷல்களை நான்கு மாதங்களுக்கு பயன்படுத்த கவர்னர் மாளிகை முடிவு செய்துள்ளது.இந்நிலையில், டி.டி.எம்.ஏ., எனும் டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று அதன் தலைவரான துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஆதிஷி, சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், தலைமைச் செயலர் தர்மேந்திரா மற்றும் பிற உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:மோசமான காற்றின் தரத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மாசுபாட்டை கட்டுப்படுத்தும் ஒருபகுதியாக, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சாலைக்கு வருவதை குறைக்க முடியும்.டில்லியில் சோதனை அடிப்படையில் செயற்கை மழையை பொழிவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசுடன் விவாதிக்குமாறு துணைநிலை கவர்னரிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் அவசரகால சூழ்நிலைகளில் நடவடிக்கை எடுக்க முடியும்.மத்திய அரசுடன் பேசுவதாக துணைநிலை கவர்னரும் உறுதி அளித்துள்ளார்.அண்டை மாநிலங்களில் இருந்து வரும் டீசல் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.