போலி தியாகிகளை கண்டறியுங்கள்! அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு: 'சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்ற பெயரில் அரசிடம் இருந்து கவுரவ ஊதியம் பெறும் போலி நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'முல்பாகல் தாலுகா, மண்டிகல் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.வி.சீனிவாச கவுடா, 85. இவர், தன்னை சுதந்திரப் போராட்ட வீரர் என்று கூறி, போலி ஆவணங்களை சமர்ப்பித்து கவுரவத் தொகை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என, 2015 ஆகஸ்ட் 1ம் தேதி லோக் ஆயுக்தாவில் நாகராஜா என்பவர் புகார் செய்தார். கலெக்டர் உத்தரவு
இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கோலார் கலெக்டருக்கு லோக் ஆயுக்தா உத்தரவிட்டிருந்தது. விசாரணையில், சீனிவாச கவுடா, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, தியாகிகளின் கவுரவத் தொகை பெற்று வருவது உறுதியானது.எனவே, சீனிவாச கவுடாவுக்கு வழங்கப்பட்ட கவுரவத் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, முல்பாகல் தாசில்தாருக்கு 2018 நவம்பர் 14ம் தேதி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி, 9,08,661 ரூபாய் கவுரவத் தொகையை, 2019 மே 30க்குள் திரும்ப செலுத்தும்படி, சீனிவாச கவுடாவுக்கு கெடு விதித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சீனிவாச கவுடா முறையீடு செய்தார். 'நான் சுதந்திரப் போராட்ட தியாகி. சத்யாகிரகம், மைசூரு சலோ போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவன். கல்வி கற்கும் வழியில்லாமல் போராடியவன். 1981 முதல், முறைப்படி ஆவணங்கள் வழங்கி, கவுரவத் தொகையைப் பெற்று வருகிறேன். இந்த உத்தரவை ரத்து செய்து, சட்டவிரோத வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்' என்று வாதிட்டார். தகுதியில்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஜி.பண்டிட், நீதிபதி ராமசந்திர டி ஹுதார் அடங்கிய அமர்வு விசாரித்தது. 'சுதந்திரப் போராட்டத்தின்போது, மனுதாரர் சிறையில் இருந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. அரசு விதிகளின்படி கவுரவ ஊதியம் பெற தகுதியில்லை. இதுவரை பெற்ற கவுரவத் தொகையை திரும்ப செலுத்த வேண்டும்' என, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.மேலும் நீதிபதிகள் கூறுகையில், 'சுதந்திரப்போராட்ட தியாகிகள் என்ற பெயரில் அரசிடமிருந்து கவுரவத் தொகை பெற முயற்சிக்கும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சிலர் போலி ஆவணங்களை தயார் செய்து, கவுரவத் தொகை பெற்று வருகின்றனர். இதுபோன்ற வழக்குகளில் அரசு, இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் உண்மையான சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரச்னைகளை சந்திக்கக் கூடாது' என்றார்.