போனுக்கு பதில் பாத்திரம் துலக்கும் சோப்
துமகூரு : கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் வசிப்பவர் ஜெயசீலன். இவர் சமீபத்தில், அமேசான் ஆன்லைன் வர்த்தக தளத்தில், 32,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் ஆர்டர் செய்திருந்தார்; அதற்கான முழு தொகையையும் செலுத்தி இருந்தார்.நேற்று முன்தினம், கூரியரில் பார்சல் வந்தது. அதை திறக்கும்படி கூரியர் நிறுவன ஊழியரிடம் கூறினார். அவரும் பார்சலை திறந்த போது, அதில் மொபைல் போனுக்கு பதிலாக, 20 ரூபாய் மதிப்புள்ள பாத்திரம் தேய்க்கும் நான்கு சோப்பு கட்டிகளும், ஒரு பிரஷ்ஷும் இருந்தன.அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன், பார்சலை கூரியர் ஊழியரிடமே திருப்பிக் கொடுத்தார். இது குறித்து, துமகூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.