உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களா காலி செய்யும் விவகாரம் மஹுவா மொய்த்ரா மனு தள்ளுபடி

அரசு பங்களா காலி செய்யும் விவகாரம் மஹுவா மொய்த்ரா மனு தள்ளுபடி

புதுடில்லி:லஞ்ச விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, பார்லிமென்டில் பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் கோடிக்கணக்கான பணம் மற்றும் பரிசுப் பொருட்களை லஞ்சமாக வாங்கியதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய பார்லிமென்ட் நெறிமுறைக்குழு, மஹுவா மொய்தராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது.கடந்த மாதம் 8ம் தேதி லோக்சபா துவங்கியதும், அவர் மீது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுத் தாக்கல் செய்துள்ளார்.இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை வரும் 7ம் தேதிக்குள் காலி செய்ய வலியுறுத்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். 'அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் வரை அரசு பங்களாவில் தங்க அனுமதிக்க எஸ்டேட் இயக்குனரகத்திற்கு உத்தரவிட வேண்டும்' என அவர் அதில் கோரியிருந்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த உத்தரவில் கூறப்படுவதாவது:விதிவிலக்கான சூழலில், ஒரு குறிப்பிட்ட காலத்தை தாண்டி அரசு பங்களாவில் குடியிருப்பாளர்கள் தங்குவதற்கு விதிகள் அனுமதிக்கின்றன.இது தொடர்பாக எஸ்டேட் இயக்குனரகத்தில் மனு தாக்கல் செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் சட்டத்துக்கு உட்பட்டே மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுவதால், அதை திரும்பப் பெற மனுதாரர் அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை