திருப்தியடையாத அரசியல்வாதிகள்
நாக்பூர், மஹாராஷ்டிராவின் நாக்பூரில், '50 கோல்டன் ரூல்ஸ் ஆப் லைப்' என்ற புத்தகத்தை வெளியிட்டு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:வாழ்க்கை என்பது சமரசங்கள், நிர்ப்பந்தங்கள், வரம்புகள் மற்றும் முரண்பாடுகளின் விளையாட்டு. ஒருவர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தாலும், அவற்றை எதிர்கொண்டு வாழ வேண்டும்.அரசியல் என்பது திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல். அங்கு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கின்றனர்.கவுன்சிலராக வருபவர், எம்.எல்.ஏ., ஆக முடியாததால் வருத்தப்படுகிறார். எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தப்படுகிறார்.அமைச்சராக உள்ளவர், முக்கிய துறை கிடைக்காததாலும், முதல்வராக முடியாததாலும் வருத்தப்படுகிறார். முதல்வராக இருப்பவர், கட்சி மேலிடம் எப்போது பதவி விலகச் சொல்லுமோ என்ற பயத்தில் இருக்கிறார்.வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் பெரிய சவாலாக இருப்பதால், அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதே வாழும் கலை.இவ்வாறு அவர் பேசினார்.