கோல்கட்டா: பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் ஜூனியர் டாக்டர்களை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து, பொதுமக்கள் நலன் கருதி வேலை நிறுத்தத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்; பேச வருமாறு அழைத்தார். பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என டாக்டர்கள் நிபந்தனை விதித்தனர். மம்தா ஏற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நீதி கேட்டும், பணியின்போது பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e7jl4aex&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
பலன் அளிக்கவில்லை
மருத்துவமனை வளாகத்தில் நடத்தி வந்த போராட்டத்தை, மாநில சுகாதாரத் துறை அலுவலகம் அமைந்துள்ள ஸ்வஸ்தயா பவன் அருகே மாற்றினர். வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதால், வேலைக்கு திரும்புமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. டாக்டர்கள் அதை ஏற்கவில்லை. அரசின் முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. முன் அறிவிப்பு இல்லாமல் நேற்று மதியம் அந்த இடத்துக்கு முதல்வர் மம்தா வந்தார். 'நீதி வேண்டும்' என்று டாக்டர்கள் கோஷமிட்டனர். ''சில நிமிடங்கள் நான் பேசலாமா,'' என மம்தா கேட்டார். கோஷம் அடங்காத நிலையில், மம்தா பேசியதாவது:நான் முதல்வராக வரவில்லை; உங்களுடைய மூத்த சகோதரியாக வந்துள்ளேன். நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் இருந்து, கடந்த 35 நாட்களாக நானும் இரவில் துாங்கவில்லை. கவலை அடைந்தேன்
உங்களுடைய பாதுகாப்பு தொடர்பான கவலையில் இருந்தேன். இங்கு பெரிய மழை பெய்தது. நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை நினைத்து கவலை அடைந்தேன்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 10ம் தேதி மாலைக்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்கும் நீங்கள் சம்மதிக்கவில்லை. நீங்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, என் கடைசி முயற்சியாக இங்கு வந்துள்ளேன். போராட உங்களுக்கு உரிமை உள்ளது. நானும் மாணவர் அமைப்பில் இருந்து தான் அரசியலுக்கு வந்தேன். ஆனால், நோயாளிகளை பற்றியும் சிந்திக்க வேண்டும். உங்கள் பெற்றோரின் கவலையையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். யார் குற்றம் செய்திருந்தாலும் தப்பிக்க விட மாட்டேன். விரைவாக விசாரித்து முடிக்க, சி.பி.ஐ.,யை வலியுறுத்துவேன். உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். அதனால்தான், கடுமையாக நடந்து கொள்ளவில்லை. இது உத்தர பிரதேசம் அல்ல. அங்குள்ள அரசு, போராட்டக்காரர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்தது. என் அரசு அப்படிப்பட்டது அல்ல. உங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த எந்த நேரமும் தயாராக இருக்கிறேன். எனவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்.இவ்வாறு பேசினார். எனினும், 'நீதி வேண்டும்' என்று டாக்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். வெறுத்துப் போன மம்தா, ''சி.பி.ஐ.,யை கேளுங்கள்,'' என சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். பின், முதல்வருடன் பேச 15 பேர் வரலாம் என அரசு தரப்பில் டாக்டர்களுக்கு அழைப்பு வந்தது. தமக்குள் ஆலோசனை செய்தபின், 30 பேர் குழுவாக மம்தா வீட்டுக்கு கிளம்பினர். அவமதிக்கிறீர்கள்
அவர்களை வரவேற்க வீட்டு வாசலில் மம்தா காத்திருந்தார். தாமதமாக வந்த டாக்டர்கள், 'உங்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்' என நிபந்தனை விதித்தனர். மம்தாவின் முகம் மாறிவிட்டது. ''உங்கள் மீதுள்ள நல்ல எண்ணத்தால் பேச அழைத்தேன். ஏற்கனவே மூன்று முறை உங்களுக்காக காத்திருந்தேன். இப்போது வந்துவிட்டு நிபந்தனை விதிக்கிறீர்கள். ''தொடர்ந்து என்னை அவமதிக்கிறீர்கள். வழக்கு நிலுவையில் உள்ளதால், நாம் பேசுவதை நேரடியாக ஒளிபரப்ப முடியாது. ஆனாலும், வீடியோவில் பதிவு செய்து உங்களுக்கு தருகிறேன். அதையும் கோர்ட் அனுமதி பெற்றுதான் செய்ய முடியும்,” என்றார். பயிற்சி டாக்டர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை; கோஷம் போட்டனர். மம்தா வீட்டுக்குள் போய்விட்டார். பின், டாக்டர்கள் கிளம்பி சென்றனர். போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
சதி செய்த இருவர் கைது
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தி, மாநில அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த சதி செய்ததாக, கோல்கட்டா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மொபைல் போனில் இது தொடர்பாக நடந்த உரையாடலை, திரிணமுல் காங்., மூத்த தலைவர் குணால் கோஷ் வெளியிட்டார். அதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கலாதன் தாஸ்குப்தா உள்பட இருவரை கைது செய்துள்ளனர்.
பலாத்கார வழக்கில் கல்லுாரி முன்னாள் முதல்வர்
கைது
கோல்கட்டா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில்,
ஆதாரங்களை அழித்ததற்காகவும், விசாரணையை தவறாக வழிநடத்தியதற்காகவும்
மருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் நேற்று சி.பி.ஐ.,யால்
கைது செய்யப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிஜித் மண்டலும் கைது
செய்யப்பட்டார். மருத்துவக் கல்லுாரி நிர்வாக முறைகேடு வழக்கில் சந்தீப்
கோஷ் ஏற்கனவே கைதானவர்.