புதுடில்லி: 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது' என, அமெரிக்கா அறிவுறுத்தியிருந்த நிலையில், ''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்; நீங்கள் வாங்காதீர்கள்,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். 'ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், அந்த பணம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக பயன்படுகிறது. எனவே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா செவி சாய்க்காததால், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். ஏற்கெனவே 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில், எஞ்சிய 25 சதவீத வரி வரும் 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவை நேரடியாக விமர்சிக்காமல், மிகவும் நாசூக்காகவே மத்திய அரசு கருத்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், முதல்முறையாக நேரடியான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
அமெரிக்க நிர்வாகத்துக்கு ஆதரவாக வர்த்தகம் செய்யும் சிலர், மற்றவர்களின் வணிகத்தை குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சமரசம் இந்தியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் வாங்க பிடிக்கவில்லை என்றால், அதை வாங்காதீர்கள். கண்டிப்பாக வாங்க வேண்டும் என உங்களை யாரும் வற்புறுத்தவில்லை. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், வாங்காதீர்கள். அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாடு தொடர் பான பேச்சுகள் முடியவில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது. அதே சமயம் விவசாயிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் நலனில் இந்தியா என்றுமே சமரசம் செய்து கொள்ளாது. அவர்களுக்காக இந்தியா ஒரு கோட்டை வரையறுத்து வைத்திருக்கிறது. அதை எங்களால் அழிக்கவே முடியாது. இதுவரை அமெரிக்க அதிபராக இருந்தவர்கள் யாரும், தற்போதைய அதிபர் போல வெளியுறவு கொள்கையை வெளிப்படையாக பேசியதில்லை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவே அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது போன்ற ஒரு மாய தோற்றம் உருவாகி இருக்கிறது. கச்சா எண்ணெய் தான் பிரச்னை என்றால், இந்தியாவை விட அதிக அளவில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவது சீனாவும், ஐரோப்பிய நாடுகளும் தான். இந்தியா நிச்சயம் அந்த பட்டியலில் சேராது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் சீனா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இழுபறி ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் திரவ நிலை இயற்கை எரிவாயுக்களை இறக்குமதி செய்கின்றன. அப்படியென்றால் அமெரிக்க அதிபர் சீன பொருட்களுக்கு தான் அதிக அளவில் வரி விதித்து இருக்க வேண்டும். எனவே, பிரச்னை கச்சா எண்ணெய் பற்றியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க பால் பொருட்களை இந்திய சந்தையில் விற்க அதிபர் டிரம்ப் அதிக அழுத்தம் கொடுத்தார். தவிர மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, எத்தனால், பழங்கள் மற்றும் பாதாம் ஆகியவற்றை விற்பனை செய்யவும் இந்திய சந்தையை திறந்து விடுமாறு கேட்டிருந்தார். இந்திய விவசாயிகள், பால்பொருள் உற்பத்தியாளர்கள், மீனவர்களின் நலனை கருதி இந்தியா அதற்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுகள் தொடர்ந்து இழுபறியாகவே இருக்கிறது.
'லேடன், பின்லேடனை தெரியுமா?'
பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் நிலையில், பழைய வரலாற்றை அமெரிக்கா மறந்துவிட்டதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த உலக நாடுகளும் தேடிய படுபயங்கரமான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒசாமா கடைசியாக பாகிஸ்தானின் அபோட்டாபாதில் தான் சுட்டுக் கொல்லப்பட்டார் . இரு நாட்டுக்கும் இடையே அந்த வரலாறு இருக்கிறது. அதை புறக்கணித்த வரலாறும் இருக்கிறது. இப்படி நடப்பது முதல் முறை அல்ல. தங்களது வசதிக்கேற்ப அரசியல் செய்வதை இரு நாடுகளுமே விரும்புகின்றன. சில சமயம் அது அரசியல் தந்திரமாக இருக்கும். சில சமயம் ஆதாயத்துக்காக இருக்கும். அமெரிக்காவுடன் எந்த அளவுக்கு வலுவான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால், பொருத்தமானதை மட்டுமே இந்தியா தேர்ந்தெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.