ராகினி திரிவேதி மீதான போதை வழக்கு ரத்து
பெங்களூரு: கன்னட நடிகை ராகினி திரிவேதி மீதான போதைப்பொருள் வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2020ல் போதைப் பொருள் விற்ற வழக்கில், சிலரை சி.சி.பி., போலீசார் கைது செய்திருந்தனர். இந்நபர்களை விசாரித்ததில், நடிகை ராகினி திரிவேதி உட்பட பலர் சிக்கினர். இவர்கள், வெளிநாடுகளில் இருந்து, போதைப் பொருள் வரவழைத்து மற்றவருக்கு விற்றதுடன், தாங்களும் பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்தது. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ரானி உட்பட, பல முக்கிய புள்ளிகள் கைதாகினர். மாதக்கணக்கில் சிறையில் இருந்து, ஜாமினில் விடுதலையாகினர். இந்த சம்பவத்துக்கு பின், சஞ்சனா கல்ரானி வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 2024ன் ஜூனில், இவர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மற்றொரு நடிகை ராகினி திரிவேதியும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவரது வாதத்தை அலசி ஆராய்ந்த நீதிமன்றம், ராகினி திரிவேதி மீதான வழக்கை நேற்று தள்ளுபடி செய்தது.