டில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்; திடீர் பரபரப்பு!
புதுடில்லி: டில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டில்லியின் பிஜ்வாசன் பகுதியில், மோசடி புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். அசோக் சர்மா என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது அதிகாரிகளை கிளம்பி செல்லுமாறு குடும்பத்தினர் மிரட்டி உள்ளனர்.அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் குடும்பத்தினர் ஆக்ரோஷம் அடைந்தனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் அதிகாரி ஒருவர் பலத்த காயமுற்றார். அவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அசோக் சர்மா தப்பியோடினார். இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர். தப்பியோடிய அசோக் சர்மாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.