உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகள்? நாடு முழுதும் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகள்? நாடு முழுதும் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

புதுடில்லி: முட்டைகளில் உடலுக்கு கேடு விளைவிப்பதாக தடை செய்யப்பட்ட, 'ஆன்டிபயாடிக்' எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளதா என்பதை நாடு முழுதும் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மண்டல அலுவலகங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பிரபலமான, 'எகோஸ்' எனப்படும் நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட, 'நைட்ரோபியூரான்' எனும், 'ஆன்டிபயாடிக்' மருந்தின் தடயங்கள் இருப்பதாக, 'யு டியூப்' சமூக ஊடகத்தில் ஒருவர் ஆய்வக பரிசோதனை அறிக்கையுடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிறுவனம் தங்கள் முட்டைகள், 100 சதவீதம் ஆன்டிபயாடிக் இல்லாமல் உற்பத்தி செய்யப்படுபவை என கூறியிருந்ததால், ஆய்வக அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. 'நைட்ரோபியூரான்' எனும் ஆன்டிபயாடிக் மருந்து கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதை மனிதர்கள் உண்ணும் போது, அந்த மருந்து உடலில் நீண்ட காலம் தங்கி, புற்றுநோய் மற்றும் மரபணு சேதத்தை ஏற்படுத்த கூடியது என ஆய்வில் கண்டறிந்தனர். இதையடுத்து இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் 'நைட்ரோபியூரான்' ஆன்டிபயாடிக்கை தடை செய்தன. இந்நிலையில், தடைசெய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து 'எகோஸ்' நிறுவன முட்டையில் கண்டறியப்பட்டுள்ளதால், மக்களிடையே முட்டையை உண்பது குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதனால் டில்லியில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு பிறப்பித்த உத்தரவில், 'அனைத்து நிறுவன முட்டைகளின் மாதிரிகளையும் பெற்று அதில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, கூறியுள்ளனர். சர்ச்சை குறித்து, 'எகோஸ்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் பண்ணைகளில் தடை செய்யப்பட்ட எந்த ஆன்டிபயாடிக்கையும் பயன்படுத்தவில்லை. ஒரு கிலோ முட்டையில், 0.73 மைக்ரோ கிராம் ஆன்டிபயாடிக் இருந்ததாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளனர். 'இது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனுமதித்த 1 கிலோவுக்கு 1 மைக்ரோ கிராம் என்ற அளவுக்கு கீழ் தான் உள்ளது. அதுவும் ஆன்டிபயாடிக் பயன்பாட்டால் வந்தவை கிடையாது. தீவனம், நீர், மண் போன்ற சுற்றுப்புற மாசு காரணமாக இடம்பெற்றவை. எங்கள் முட்டைகள் பாதுகாப்பானவை' என கூறியுள்ளனர்.

தமிழகத்திலும் சோதனை

மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, முட்டை வர்த்தகம் நடக்கிறது. 'நைட்ரோபியூரான்' அச்சுறுத்தல், இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் முட்டைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். உற்பத்தி மையங்களிலும், மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகளிலும், திடீர் ஆய்வு நடத்தி, சந்தேகத்துக்குரிய முட்டைகளைப் பறிமுதல் செய்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வருகிறோம். ஓரிரு வாரங்களில், அதன் முடிவுகள் வெளியாகும். முட்டைகளின் பாதுகாப்பு குறித்து, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் அச்சப்பட வேண்டாம்: கர்நாடக அமைச்சர்

முட்டை விவகாரம் குறித்து கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு, 124 முட்டை மாதிரிகளை சோதித்தோம். அப்போது, 123 மாதிரிகள் நல்ல தரத்தில் இருந்தன, ஒரு மாதிரியில் மட்டும் பிரச்னை இருந்தது. தற்போது ஒரு தனியார் நிறுவனத்தின் முட்டையில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தின் முட்டை உட்பட பல்வேறு நிறுவனங்களின் முட்டைகளை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அதன் அறிக்கை 5 நாட்களில் கிடைக்கும். மாநில அரசு முட்டையின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
டிச 17, 2025 12:11

நைட்ரோபியூரான் எனும் ஆன்டிபயாடிக் மருந்து கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதை மனிதர்கள் உண்ணும் போது, அந்த மருந்து உடலில் நீண்ட காலம் தங்கி, புற்றுநோய் மற்றும் மரபணு சேதத்தை ஏற்படுத்த கூடியது என ஆய்வில் கண்டறிந்தனர். மேலும் அந்த நைட்ரோபியூரான் எனும் ஆன்டிபயாடிக் மருந்துகளை உண்ணும் கோழி இறைச்சிகளை, பன்றி இறைச்சிகளை உண்ணுவதாலும் அதை உண்ணுபவர்களுக்கு கூட புற்றுநோய் வரவாய்ப்பிருக்கிறது. அந்த கோணத்திலும் நாம் இந்த விஷயத்தை பார்க்கவேண்டும்.


ram
டிச 17, 2025 11:51

திருட்டு திமுக ஆட்சியில் முட்டையில் கூட கலப்படம் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 10:15

பத்தாண்டுகளாகவே இந்த சர்ச்சை அவ்வப்பொழுது எழுந்து பிறகு அடங்கி வந்தது ...... உணவு, காற்று, தண்ணீர் அனைத்தும் கேடு விளைவிப்பனவாக மாறிவிட்டன .....


Kasimani Baskaran
டிச 17, 2025 08:30

கோழியை ஒரு சதுர அடிக்குள் பூட்டி வைத்து உணவு கொடுத்து பராமரிக்கும் பொழுது பல வித நோய்கள் பரவும் என்பது தெரிந்ததுதான். அப்படி அடைத்து வைக்கப்பட்ட கோழியால் தரமான முட்டை உற்பத்தி செய்ய முடியும் என்பதே சந்தேகம். இதில் புதிதாக கான்சர் வருமளவுக்கு எதிர் உயிரியின் அளவு இருக்கும் என்பது புதிய தகவல்.


Iyer
டிச 17, 2025 07:50

தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் நலம் கெட்டுப்போகும். தினமும் முட்டை சாப்பிட்டுவந்தால் CANCER, HEART PROBLEM வெகுவிரைவில் உண்டாகும். தினமும் முளைவிட்ட பயறு, முளைவிட்ட கொத்துக்கடலை சாப்பிட்டுவந்தால் நோயின்றி கடைசி மூச்சு வரை வாழலாம்.


நிவேதா
டிச 17, 2025 08:58

உங்களுக்கு கோழி மேல் கோபமா அல்லது முட்டை மேல் கோபமா? உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் சாப்பிடாதீர்கள். தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.


rama adhavan
டிச 17, 2025 02:18

நமது பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அடிக்கடி தரத்துக்காக சோதனை செய்யப்படுகின்றனவா என்பதை எப்படி அறிவது?


Modisha
டிச 17, 2025 07:29

ஓட்டுக்காக வழங்கப்படும் முட்டை. தரம் பற்றி கவலை இல்லை. அழுகிய முட்டை கூட உபயோகப்படுத்த படும்.


முக்கிய வீடியோ