கார் விபத்தில் மணமகன் உட்பட எட்டு பேர் பலி
சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், 'பொலேரோ' கார் கல்லுாரி சுவரில் மோதியதில் மணமகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.உ.பி.,யின் சம்பலில் உள்ள ஹர் கோவிந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த சூரஜ், 24, என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. புடான் மாவட்டம் சிர்டவுல் என்ற இடத்தில் உள்ள மணமகளின் கிராமத்திற்கு, சூரஜ் உட்பட குடும்பத்தினர் 10 பேர் 'பொலேரோ' காரில் நேற்று முன்தினம் சென்றனர். காலை 6:30 மணிஅளவில் ஜெவனாய் கிராமம் வழியே சென்றபோது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, கல்லுாரி சுவரில் மோதி கவிழ்ந்தது. ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்று பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் உயர் சிகிச்சைக்காக அலிகாரில் உள்ள மருவத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.